சென்னை:

 ஏற்கனவே அறிவித்தபடி வரும் 3ந்தேதி (நாளை) வணிகர்கள் கடை அடைப்பு உறுதி என்று வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வரும் 3ந்தேதி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணா விரத போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் 5ந்தேதி ‘பந்த்’க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாமக தலைமையிலான விவசாய அமைப்புகள் வரும் 11ந்தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து உள்ளன. அன்று வணிகர் சங்கங்களின் மற்றொரு பிரிவான வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்க பேரவை கடை அடைப்பு நடத்துவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் 3ந்தேதி (நாளை) கடை அடைப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வணிகர் சங்கங்களுக்கு 5ந்தேதி கடை அடைப்பு நடத்தும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா,  3-ம் தேதி கடையடப்பு என்பதில் மாற்றமில்லை என்று கூறினார்.

இதுகுறித்து ஸ்டாலினிடம் விளக்கி கூறியதாகவும், நாளை கடை அடைப்பு  அறிவிப்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும்,  ஏப்ரல் 5ம் தேதி கடை  அடைப்பு நடத்துவது பற்றி வணிகர் சங்க அமைப்புகளுடன் கலந்து பேசி 3ம் தேதி தெவிப்போம் என்றும் கூறினார்.