நாளை அம்பேத்கர் பிறந்தநாள்: பாதுகாப்பை பலப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

சென்னை:

நாளை (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி, நாடு முழுவதும்  பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும்படி மாநில அரசுகளுக்கு மத்திய  உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எஸ்சி., எஸ்.டி.பிரிவினருக்கான வன்கொடுமை சட்டம் காரணமாக வட மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பல மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில்,  நாளை (ஏப்ரல் 14) அம்பேத்கர் ஜெயந்தி வருவதால், அசம்பாவிதச் சம்பவங்கள் நடை பெறாத வண்ணம், அதை  தவிர்க்கும் பொருட்டு  அனைத்து இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு  மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்து உள்ளது.

மேலும், பதற்றம் ஏற்படும் என அறியப்படும் இடங்களில்  பொது சொத்துக்கள் மற்றும் உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்  அமைதியை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வன்முறை தொடர்பான சம்பவங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து  கண்காணிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.