அமிதாப் பச்சனுக்கு நாளை தாதா சாகேப் பால்கே விருது

டில்லி

பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கு நாளை தாதா சாகேப் பால்கே விருதைக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்க உள்ளார்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 66-வது தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. குஜராத்தி திரைப்படமான “ஹெலாரோ”வுக்கு சிறந்த திரைப்பட விருது கிடைத்துள்ளது. நடிகர்கள் விக்கி கவுசல் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோர் முறையே “யூரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்” மற்றும் “அந்தாதூன்” ஆகியவற்றில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதுகளை வென்றனர்.  “மகாநடி” என்னும் தெலுங்குப் படத்தில் நடித்ததற்காகக் கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். சிறந்த இயக்குநர் விருதை   “உரி” திரைப்பட இயக்குநர் ஆதித்யா தார் வென்றார்.

2019 பொதுத் தேர்தலை முன்னிட்டு 2018 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, தாமதமாக அறிவிக்கப்பட்டது. இவ்விழா இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.  முதலில் நடந்த விழாவின் போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரு சில விருதுகளை மட்டுமே வழங்கினார். இவ்விழாவில் முதல் கட்ட விருதுகளை மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோரும் மற்ற விருதுகளைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் வழங்கினார்கள்.

பல வருடங்களாகத் தேசிய விருதுகள் குடியரசுத் தலைவரால் விருதுகளை வென்றோருக்கு வழங்கப்படுகின்றன. எனினும் இந்த ஆண்டு, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்குகிறார். அத்துடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் தேசிய விருது வென்ற கலைஞர்களுக்குத் தேநீர் விருந்து வழங்க உள்ளார்.

You may have missed