டில்லி

நாளை காணொலி மூலம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட ஊரடங்குக்கு  பிறகு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் ரெப்போ ரேட்டில் 75 புள்ளிகளைக் குறைத்தது, அத்துடன் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் திருப்பி்ச்செலுத்துவதில் 3 மாத கால அவகாசம் வழங்கியது.  இந்த வசதியை இதுவரை 3.20 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தியதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற வாரம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  இந்த கூட்டத்தில் தவணை செலுத்த அவகாசம் அளித்ததில் மக்கள் எந்த அளவு பயனடைந்துள்ளனர் என்பது குறித்து விவாதிக்கபட உள்ளதாகக் கூறப்படுகிறது

அத்துடன் ரிசர்வ் வங்கியின் வட்டிக்குறைவால் வங்கிகளுக்கு கிடைக்கும் கூடுதல் நிதியை வங்கிகள் மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் எந்த அடிப்படையில் கடன் வழங்குவது குறித்தும் கூட்டத்தில் பேசப்படலாம் எனவும் குறு நிதி நிறுவனங்கள், என் பி எப் சி ஆகியவற்றுக்கான நீண்டகால ரெப்போ செயல்பாடு (டி எல் டி ஆர் ஓ) எவ்வாறு, கடன் வழங்கிய அளவு ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.