நாளை குருப்பெயர்ச்சி: 12 ராசிகள் மற்றும் நட்சத்திரங்களுக்கான பலன்கள்! வேதாகோபாலன் (ஆடியோ)

ங்கள் பத்திரிகை.காம் இணைய இதழில் பிரபைல ஜோதிடர் வேதாகோபாலன் 2 ராசிகளுக்கும் நட்சத்திரம் வாரியாக கணித்துள்ள குருப்பெயர்ச்சி பலன்கள்.

இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசிகளில் உள்ள அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களுக்கும் குருப்பெயர்ச்சி பலன்களை, எளிமையான முறையில் பிரபல ஜோதிடர் திருமதி வேதா கோபாலன், பத்திரிகை.காம் வாசகர்களுக்காக பிரத்யேகமாக கணித்துள்ளார்…

நாளை (29ந்தேதி ) அதிகாலை  குருப்பெயர்ச்சி நடைபெறுவதைத் தொடர்ந்து உங்களது ராசி மற்றும் நட்சத்திரத்துக்கான பலன் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்….

12 ராசிகளின் நட்சத்திரங்களுக்கு உரிய பலன்கள் ஆடியோ செய்தியாகவும், தனிச்செய்தியாகவும் பிரசுரம் செய்யப்பட்டு உள்ளது.

குருப்பெயர்ச்சி பலன்கள் –  பொதுப்பலன்

அன்புள்ளம் கொண்ட வாசகர்களுக்கு வணக்கம்.  29.10.2019 (அதாவது விகாரி வருடம் ஐப்பசி மாதம் 12) அன்று குரு பகவான் இத்தனை காலம் குடியிருந்த விருச்சிக ராசியிலிருந்து பெயர்ந்து தனுசு ராசிக்குள் பிரவேசிக்கிறார். அது அவரின் சொந்தவீடு என்பதாலும் இத்தனை காலம் கேது மற்றும் சனி அந்த வீட்டில் இருந்து வந்ததால் ஏற்பட்டிருந்த கெடு பலன்களை தேவ குருவாகிய இவர் பெருமளவு குறைப்பார் என்பதாலும் பன்னிரண்டு ராசிகளுக்கும் நற்பலன்களே உறுதியாகக் கிடைக்கும். பொதுப்பலன்களும் நன்றாகவே இருக்கும்.

நாட்டின் நிதி நிலமை மேம்படும். இயற்கை சீற்றங்கள் குறையும். தண்ணீர்ப் பற்றாக்குறை குறையும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். குழந்தை பிறக்காதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். வேலை கிடைக்காத வர்களுக்கு வேலை கிடைக்கும். இது எல்லாம் ஏற்கனவே அமையப்பெற்றவர்களுக்குக்கூடுதல் நன்மைகள் நிகழும்.

மேஷம் ராசி, அஸ்வினி நட்சத்திரம்

பிரமாதமான பலன்கள் உண்டுங்க.  வயிறு சம்பந்தமான நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைச்சுடுவாரு குரு பகவான். அப்பாவுக்கு இருந்து வந்த குழப்பங்களும் கவலைகளும் தீரும். அவர் உத்யோகத்தில் முன்னேற்றம் உண்டு.  வெளிநாடு போவார். ‘நமக்கு ராசியே இல்லை.. அதிருஷ்டமே கண்ணில் தெரியாத தொலைவில் காணாமல் போயிடுச்சு..’ என்றெல்லாம் புலம்பிக்கிட்டிருந்தீங்களே.. இனி அப்படியெல்லாம் இல்லைங்க. அதிருஷ்டம் உங்க அட்ரஸ் தேடி வரும். ஆமை வேகத்தில் போயிக்கிட்டிருந்த முன்னேற்றமெல்லாம் ராக்கெட் ஸ்பீடில் பறக்குமே இனி.  புது ஐடியாக்களுடன் வாழ்க்கையை அணுகுவீங்க. வாழ்க்கையில் முன்னேறுவீங்க. தொட்ட காரியங்கள் துலங்கும்.

மேஷம் ராசி பரணி நட்சத்திரம்

புது முயற்சிகள் வெற்றியாக முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தந்தையால் நன்மைகளும் நிதி ஆதாயங்களும் கிடைக்கும். எனினும் அவருடன் நல்ல வகையில் அனுசரித்துப போக வேண்டிய பொறுப்பில் இருக்கிறீர்கள். தந்தை வழி சொத்து கிடைக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் அதிக கவனம் தேவை.  நண்பர்கள், உறவினர்களுடன் பயணங்கள் செல்வீர்கள் பண விவகாரங்கள் மெதுவாக  இருக்கும். ஆரோக்யத்தில் கவனம் தேவை. உங்க பேச்சில் அனுபவ அறிவு பளிச்சிடும். கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். ஏங்கிக் காத்திருந்தவங்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சி வெற்றி பெற உதவி செய்வார்.

மேஷம் ராசி கிருத்திகை நட்சத்திரம்  (1-ம் பாதம்)

மகளின்  அல்லது மகனின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். உறவினரும் நண்பர்களும் மூக்கின் மேல் வைச்ச கையை எடுக்க வெகுநாட்களாகும். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்புக்காக எவ்ளோ காலம் காத்திருந்தீங்க. அது வரும். செலவுகளைக் குறைத்து சேமிக்க ஆரம்பிச்சுடுவீங்க. பல காலத்துக்குக் கனவாக இருந்த வீடு வாங்கும் விருப்பம் ஒரு வழியாக நிறைவேறும். ஒதுங்கியிருந்த சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். என்ஜாய். சுப செலவுகள் உண்டு. தந்தைக்கு இருந்து வந்த ஆரோக்கிய மற்றும் நிதிப் பிரச்சினைகள் தீரும். உத்யோகத்திலும் தொழிலிலும் முன்னேற்றம் உண்டு.

ரிஷபம் ராசி கிருத்திகை (2,3,4ம் பாதம்)

சகோதர சகோதரிகளுடன் சண்டை வேண்டாமே. நோய்கள் குணமாகி நிம்மதி வரும். வெகு சீக்கிரத்தில் ஒருவருக்கொருவர் பழம் விட்டுவிட்டு  வெள்ளைக்கொடி காண்பிச்சு ஜாலியாக் கைகோத்துக்கிட்டு சுற்றுலாவெல்லாம் போகப் போறீங்களே. சோகமும் சோர்வும் நீங்கி, உற்சாகமும் மகிழ்ச்சியுமாக காணப்படுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கோபத்தால் உடல் நிலை பாதிக்கப்படலாம். எனவே கோபம் வேண்டாம். பயணங்கள் நிறைய இருக்கும். சகோதரர்களின் குடும்பத்துடன் நல்லுறவு ஏற்படும். எதிர்பாலினத்தினரால் நன்மைகள் ஏற்படும். கடன்கள் விஷயத்தைப்பொருத்தவரை கவலை வேண்டாம்.  இதமாகப் பேசி வட்டியையாவது தருவீர்கள். ஆஃபீசில் ஏற்கெனவே உற்ற பிரச்னைகளுக்கு வெவ்வேறு கோணங்களில் யோசித்துத் தீர்வு காண்பீர்கள்.

ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம்

டியர் ஸ்டூடன்ட்ஸ்… ப்ளீஸ் படிப்பில் ஆர்வத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். அலுவலகவாசிகளுககு உத்யோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டுதான். எனினும் சில டென்ஷன்களையும் தாமதங்களையும் எதிர்பாராத (விருப்பமில்லாத) திருப்பங்களையும் தவிர்க்க முடியாது. நகைகளும் உடைகளும் வாங்குவீங்க. எனினும் லோனும் வாங்குவீங்க. அவாய்ட் செய்யப் பாருங்க. நண்பர்கள் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பட்.. கண் மண் தெரியாமல் செலவு செய்துடாதீங்க. கணவன் – மனைவி இருவரும் உங்க குடும்பத்தில் மூன்றாவது நபரின் தலையீட்டை தயவு செய்து அனுமதிக்காதீங்க. வழக்குகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். எதிரிகளாலும்கூடச் சின்னதொரு ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம் ராசி மிருகசீர்ஷம் நட்சத்திரம் (பாதம் 1,2)

பெரியவர்களின் ஆசி இருக்கும்.. சற்றே மறைமுகமாக. இந்த விஷயத்தை எப்படித்தான் முடிப்போமோ என்ற கிலியில் இருந்த நீங்கள், அட.. இத்தனை சுலபமாக முடிக்க முடிந்ததே என்று சந்தோஷமாக வியப்பீர்கள். போன வருஷம் உடல் நலம் கெட்டிருந்ததல்லவா? இந்த வருஷம் அப்படியே ஆப்போசிட். ஆரோக்யத்தின் உச்சியில் இருப்பீங்க. பேச்சினால் நன்மையும் லாபமும் ஏற்படுமுங்க. ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதாவது எடுக்கும்படி ஆகிவிடும். ஆகவே. பழைய பிரச்னைகளுக்கு வேற ஒரு கோணத்தில் தீர்வு காண்பீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லதுங்க. வேலைச்சுமையால் தூக்கம் குறையும். ஆனாலும்கூட அதற்கான நல்ல பலன் மகிழ்விக்குமுங்க.

மிதுனம் ராசி  மிருகசீர்ஷம் நட்சத்திரம் பாதம் 3, 4

கடன்கள் மடமடன்னு அடையும். கல்யாணம் எப்பதான் ஆகுமோன்னு சலிச்சுப்போயிருந்தீங்க. ஆனால் இதோ.. வேளை வந்தாச்சுங்க. பூர்வீக சொத்து கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். எப்பப்பாரு அவங்களோ ஃபைட் பண்ணிக்கிட்டே இருக்காதீங்க. பாவம். பிழைச்சுப்போகட்டும். விட்ருங்க. திடீர் லாபங்கள் அதிகரிக்குங்க.  உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்க லைஃப் பார்ட்டனருக்குக்கும்கூட இத்தனை காலம் இருந்து வந்த டென்ஷன்கள் குறையும். குடும்பப் பிரச்சினையில்.. குறிப்பாகக் கணவன் மனைவிக்கிடையில் அன்னியர்களை என்டர் பண்ண அலவ் பண்ணாதீங்கப்பா.

மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம்

மனஇறுக்கங்கள் குறைவதால் நிம்மதி அதிகமாகும். குடும்பத்தில் அமைதி அதிகமாகும். வீடு கட்டும் பணி  அரைகுறையா நின்னுக்கிட்டிருந்ததா? அதை இப்ப தொடங்குவீர்கள். தொடர்வீங்க. அது மட்டுமில்லீங்க… தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.  அதுவும் உங்களுக்கு ஏற்கனவே அந்த வாய்ப்பு வந்து தட்டிப்போயிருந்ததல்லவா? இனி தடை இல்லை. வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்து விடாமல் பார்த்துக்கொள்வீங்க என்பதால் நஷ்டம் குறைம்.  தரமான பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். கடன் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலியுங்கள். எடுத்த எடுப்பில் உணர்ச்சி வசப்பட்டு சத்தம் போடாதீங்கப்பா. இருக்கின்ற இடத்திலேயே உத்யோகத்தைத் தொடர்வது நல்லது. இப்போது மாறுவது பற்ற யோசிக்க வேணாங்க.

மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் 1, 2, 3 பாதங்கள்

இரும்பு, கடல் உணவுகள், ஹோட்டல் மற்றும் ரசாயன வகைகள் சார்ந்த வியாபாரம் அல்லது உத்யோகத்தில் உள்ளவங்களுக்கு லாபம் / சம்பளம் அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் உண்டுங்க. அதாவது பென்ஷன் போன்றவை தாமதமாகியிருந்தாலும், பாஸ்போர்ட் விசா போன்றவை வராமல் இருந்தாலும் அவை உடனே கிடைக்கும். பிதுரார்ஜித சொத்து சம்பந்தமான வழக்கில் வெற்றிபெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். அக்கம்பக்கத்தினருடனான பேச்சுவார்த்தை எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும். மகளின்/ மகனின் திருமணத்துக்காக கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.   அதனால் என்னங்க. இந்தச் சுப நிகழ்ச்சி வராதான்னு எத்தனை காலமாய் ஏங்கித் தவமிருந்து காத்துக்கிட்டிருந்தீங்க.

கடகம் ராசி புனர்பூசம் 4ம் பாதம்

சோகமாக இருந்த உங்களின் முகம் இனி மலர்ச்சி அடையும். அழகும் இளமையும் கூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். லோனுக்கு மனுப்போட்டுக் காத்திருந்தது மட்டுமின்றி.. அதில் ஆயிரம் சிக்கல்களும் பிரச்சினைகளும் வந்திருந்தனதானே? எல்லாமும் சரியாப்போச்சுங்க. தன்னம்பிக்கை பிறக்கும். விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்குவீங்கப்பா. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். இத்தனை காலமாக முடிவுகள் எடுப்பதில் உங்க மனசில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை பற்றி இருந்த பிரச்சினைகளும் சண்டை சச்சரவுகளும் ஒரு ஃபுல்ஸ்டாப் வெச்சு சுமுகமாகும்.

கடகம் ராசி பூசம் நட்சத்திரம்

அலைச்சலைக் குறைத்து உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். யோகா, தியானம் கை கொடுக்கும். தங்கை தம்பிகளுக்காக வேண்டிக்கொஞ்சம் அலைச்சல் இருக்கும் ஆனால் உறவு சுமுகமாக இருக்கும். பரஸ்பர நன்மைகளும் உண்டு.  குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். வீட்டுக்குத் தேவையான ஃப்ரிஜ்.. வாஷிங் மெஷின் போன்றவை வாங்குவீங்க. அலுவலக முயற்சி காரணமாகப் பணவரவு உண்டு. ஆனால், எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லதுங்க. மேலதிகாரிங்ககிட்டயும் சரி.. உங்களுக்குக் கீழே வேலை பார்ப்பவங்ககிட்டயும் சரி.. குரலை உசத்திப் பேசாமல் மென்மையாய்.. தன்மையாய்ப் போவது நல்லதுங்க. உங்க பொறுப்பை மற்றவங்க கிட்ட ஒப்படைக்காதீங்க.

கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம்

வேலை பளு அதிகமாயிருக்கே.. வேறு வேலை தேட வேண்டியிருக்குமோ என்றெல்லாம் பதற்றப்படாதீங்கப்பா. நன்மையே உண்டாகும். எது பற்றியும் கவலை வேண்டாம்.  சிலருக்கு துபாய் போன்ற வெளிநாட்டில், அல்லது  அண்டை மாநிலத்தில் வேலை அமையும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த பிராமிஸ்ஸூம் செய்ய வேண்டாங்க. ஒரே சமயத்தில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்கவேண்டி வரும். சாப்பிடவும் தூங்கவும் நேரம் இருக்காது. இப்போதைக்கு அதற்கு பெரிய அளவில் பெனிஃபிட் எதுவும் இல்லைன்னு  சோர்ந்து போகாதீங்க. உங்கள் திறமையையும் உழைப்பையும் மேலிடத்தில் கவனிச்சு மார்க் போடுவாங்க. பர்சனலானாலும் சரி.. அலுவலக சம்பந்தப்பட்டதானாலும் சரி..  எந்த விஷயத்தையும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லதுங்க.

சிம்மம் ராசி மகம் நட்சத்திரம்

முக்கியக் கோப்புகளைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல் படுங்கப்பா. எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குறிப்பாகக் குழந்தைங்களின் படிப்பு கல்யாணம் போன்ற விஷயங்களுக்கு அநாயாசமாகப் பணம் கிடைக்கும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். சொத்து சேரும். தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். புதிய வீட்டில் குடியேறுவீங்க. கணவன் மனைவி ஒருவருக் கொருவர் மனம்விட்டுப் பேசி முக்கிய முடிவுகள் எடுப்பீங்க. நவீன டைப் வாகனம், செல்போன் அல்லது லாப் டாப் போன்ற பொருட்கள் வாங்குவீர்கள். குழந்தைங்களுக்கான கல்யாண முயற்சிகள் ஒரு வழியாய் முடிவுக்கு வந்து பலிதமாகும். மொத்தத்திலேயே  தள்ளிப்போன காரியங்களெல்லாம் நல்லவிதமாக முடியும்.

சிம்மம் ராசி பூரம் நட்சத்திரம்

உங்களின் பலவீனங்களைப் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் மாற்றிக்கொள்வீர்கள். இதற்கு வழிகாட்டியாக உங்கள் ஆசான் போன்ற யாராவது உதவுவாங்க. சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவுகள் எடுப்பீங்க. பயணங்களால் ஆதாயம் உண்டு. ஆனால் அந்த நன்மை உடனடியாகத் தெரிய வராமல் சற்றே இழுத்தடிச்சுத் தாமதமாகத் தெரிய வரும். எனவே.. பொறுமை அணிந்து கொள்வது நல்லதுங்க. விலகிச்சென்ற உறவினர்கள் வலியவந்து பேசத் தொடங்குவார்கள். மன்னிச்சு ஏற்றுக்கொள்வது பெட்டர். பிகாஸ்.. அவங்களால உதவி உண்டு. அலுவலகத்தில்  காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். மனசில் நிம்மதி  வந்து உட்காரும். நீங்க பிசினஸ் செய்பவராங்க? எனில்  வியாபாரத்தைக் கடன் வாங்கி  விரிவுபடுத்த  வேண்டாம். கையில் ஐவேஜ் இருந்தா என்ன வேணும்னாலு செய்ங்க. லோன்? மூச்..

சிம்மம் ராசி உத்திரம் நட்சத்திரம் பாதம் 1

பிசினஸ்காரங்க … கமிஷன், ரியல் எஸ்டேட், பெட்ரோ, கெமிக்கல், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள். ஆனால் சும்மா இல்லீங்கோ. கடுமையா உழைச்சுத்தான். வேலைச்சுமை இருக்கும். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்த மாட்டவே மாட்டீங்க. நேரம் காலம் பார்க்காமல் உழைத்தும் பயன் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். புதிய அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். உயர்கல்வியில் கவனம் செலுத்திப் படிக்க வேண்டிய முக்கியமான காலகட்டம் இது. டைவர்ட் ஆகாமல் படிங்க.  எதிர்காலம் பற்றி நல்லா யோசித்து .. நலம் நாடுபவர்களை கன்சல்ட் செய்து.. முடிவெடுங்கள். பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் அதிகாலையில் அலாரம் வைச்சு எழுந்து படிக்கத் தவறாதீர்கள். விருப்பப்பட்ட பிரிவில் சேர போராடவேண்டியிருக்கும்.

கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4 பாதம்

பேச்சைக் குறையுங்க. ப்ளீஸ்.  வம்பு பேச்சு வேண்டாம். குறிப்பாய் அலுவலகத்தில் யாரைப் பற்றியும் யாரிடமும் எதுவும் பேசவே பேசாதீங்க. மேலதிகாரிகளைத் தூக்கி எறியும் விதமாகவோ அலட்சியமாகவோ பேச வேண்டாங்க. கணவன் மனைவிக்குள் இப்போது ஏற்படும் சின்னப் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாமல் கவனமாக இருங்க. ஏனெனில் அது கிளறாமல் இருந்தால் சிம்ப்பிளாய் முடிஞ்சுடப்போகுது.  கலைத் துறையினர் சிறிய வாய்ப்புகளாக இருந்தாலும் அதைப் பயன்படுத்துங்கள். புதிய நிறுவனங்களை நம்பி ஏமாந்துட வேணாங்க.   உற்சாகமடைவீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும். மனைவிவழியில் ஆதாயமடைவீங்க. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கப் போறீங்க.  செலவுகள் நிறைய ஏற்படும். எல்லாமே செலவுகள் இல்லைங்க. முதலீடுகள் என்பதை நினைவில் வெச்சுக்குங்க.

கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம்

தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். அதுகூட வியப்பில்லைங்க. மூஞ்சியைத் தூக்கி வெச்சுக்கிட்டு சண்டை போட்ட அக்கா தங்கைங்கள்ளால் வெள்ளைக்கொடி காட்டிக்கிட்டு வருவாங்க. திடீர்ப் பயணங்கள் உண்டு. அவற்றால் நன்மைங்களும் உண்டுங்க. வியாபாரத்தில் வரவு உயரும். சந்தை நிலவரத்தைத் தெரிந்துகொண்டு நல்ல புத்திசாலித்தனம் மற்றும் கேல்குலேஷன் காரணமாகக் குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீங்க. புதுப்புதுக் கிளைகள் தொடங்குவீங்க. நீங்க பிசினஸ் செய்பவர் என்றால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். நீங்கள் வேலைக்கு முயற்சி செய்துக்கிட்டிருந்தால் வெளிநாட்டு வேலை கிடைக்கும். பங்குச்சந்தை, இரும்பு, கட்டடம் சம்பந்தப்பட்ட தொழில் அல்லது உத்யோகத்தில் லாபமடைவீர்கள்.

கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் 1, 2 பாதங்கள்

உத்தியோகத்தில் சுமுகமான சூழ்நிலை உருவாகும். பொறாமைப்பட்டவங்க திருந்தாவிட்டாலும் வேறு இடத்தில் வேலை கிடைச்சு, டாட்டா பைபை சொல்லிட்டுக் கிளம்புவாங்க. அலுவலக சூட்சுமங்களைக் கத்துக்குவிங்க  சக ஊழியர்களிடையே மட்டுமில்லாமல் உயர் அதிகாரிங்க கிட்டயும் உங்களின் சிந்தனைக்குப் பாராட்டுகள் கிடைக்கும். கல்யாணமாகாமல் காத்துக்கிட்டிருந்தவங்களுக்கு வரன்கள் தட்டித்தட்டிப் போயிக்கிட்டிருந்தது இல்லையா.. இந்த முறை கல்யாணம் கைகூடும். புதிய புதிய உத்யோக மற்றும் பயண வாய்ப்புகள் வரும். தடைப்பட்ட கல்வியைத் தொடர்வீங்க. இத்தனை நாட்கள் வேலை பார்த்த இடம் மாறிப் புதிய இடத்தில் உத்தியோகம் அமையும். மாணவ மாணவியர் ஏனோதானோ என்று படிக்காமல் இனி ஆர்வத்துடன் படிப்பீங்க. பலனும் சூப்பர்தான்.

துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் 3, 4 பாதங்கள்

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீங்க. அதில் நீங்களே எதிர்பார்க்காத மார்க் கிடைக்கும். காலேஜில்கூட நீங்க இத்தனை காலம் வாங்கிக்கிட்டிருந்த  மதிப்பெண் உயரும். கலைத்துறையினர் இனி துளிர்த்தெழுந்து சந்தோஷ நடை போடுவார்கள். ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதுடன் வெற்றி நடைதான் போங்க. வேலை தேடிக்கொண்டிருந்தவங்களுக்குப் பெரிய நிறுவனங்களின் அழைப்பு தேடி வரும். ஆலோசித்து.. விசாரித்துத் தீர்மானம் செய்ங்க. நீங்க கலைத்துறையைச் சேர்ந்தவர் என்றால் பட்டிதொட்டியெங்கும் பாராட்டுக் கிடைக்கும். என்ஜாய். வேலைச்சுமையும் அலைச்சலும் இருக்கும். அதனால் பரவாயில்லைங்க. சம்பளமும் மோசம் இல்லை. அரசு அனுமதி கிடைத்து சிலர் புதிதாக வீடு கட்டத் தொடங்குவீங்க.

துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரம்

உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். சில உறவுகளை பலப்படுத்த மத்தியஸ்தம் செய்து பாராட்டுப் பெறுவீங்க. பட்… அதே சமயம்.. கணவன் மனைவிக்குள் வரும் சிறு பிரச்னைகளைப் பெரிதாக்க வேண்டாம். பெற்றோரிடம் புகார் சொல்ல வேண்டாம். பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்டாதீர்கள். எல்லாம் போகப்போகச் சரியாகும்.  மகளுக்கு வரன் தேடும்போது நன்றாக விசாரித்து முடிப்பது நல்லதுங்க. எஸ்பெஷலி அது காதல் கல்யாணம் என்றால் கேட்கவே வேண்டாம். மேலும் அதிகக் கவனம் தேவை. சொத்து ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அநாவசியமாக யாரிடமும் வாக்குறுதி தர வேண்டாம்.. அதாவது எங்கும் எதிலும் சற்று அதிகக் கவனமாய் இருந்துடுங்க என்கிறேன்.

துலாம் ராசி விசாகம் நட்சத்திரம்  1, 2, 3, பாதங்கள்

இத்தனை காலமாய் டென்ஷன் குடுத்துக்கிட்டிருந்த தாயாரின் உடல்நிலை சீராகும். பழைய வீட்டில் பிரச்சினை களைச் சந்திச்சீங்கதானே. இனி டோன்ட் ஒர்ரி. நல்ல வீட்டுக்கு மாறுவீங்க.  சிலர் வேறு ஊருக்குக் குடிபெயர்வீங்க. பழைய கடனில் ஒரு பகுதியையாவது பைசல் செய்ய வழி கிடைக்கும். அல்லது முழுவதுமே குடுத்துத் தீர்க்கவும் வாய்ப்பிருக்குங்க. ஆயுள், ஆரோக்கியம் கூடும். தந்தை வழி சொத்துகள் சம்பந்தமான வழக்குகள் உங்களுக்குச் சாதகமாகவே முடிவுக்கு வரும். ஒருபக்கம் அலைச்சல் இருந்தாலும் முன்னேற்றம் உண்டு. பணவரவு நிச்சயமாய்க் குறையாதுங்க. எழுத்தாளர் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்தவங்களுக்குப் புகழ், கௌரவம் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. தவிரவும் அரசியல்வாதிகளுக்கும் நல்லவேளை வந்தாச்சு.  இது வரை நிம்மதியைக் குலைத்துக்கொண்டிருந்த  சொத்துச் சிக்கல் ஒரு முடிவுக்கு வரும்.

விருச்சிகம் ராசி விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம்

வருமானம் உயரும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பான முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பயணத்தில் கவனமாக இருங்கள். குறிப்பாகப் பொருட்களை ஜாக்கிரதையாப் பார்த்துக்குங்க. சாப்பிடவும் தூங்கவும் நேரம் இல்லாமல் ஓடு ஓடுன்னு ஓடுவீங்க. உழைப்பீங்க. போதாக்குறைக்குப் பயணங்கள் வேறு மேற்கொள்ள வேண்டி வரும். பெண்களுக்கு கர்பப் பை சம்பந்தமான சிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்திலேயே மருத்துவ உதவியை நாடுங்க. பெரிய பிரச்சினையாகாமல் தவிர்க்கலாம்.. மகன்/ மகள் வாழ்வில் வளம் பெருகி ஒளி திகழும்.

விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம்

கோபத்தைக் குறைச்சுக்குங்க. அவசர பதில்களையும் வாக்குவாதங்களையும் குறைச்சுக்கிட்டு நிதானமாகவும் மென்மையாகவும் பதில் சொல்லுங்க. குறிப்பாய் மேலதிகாரிங்க.. ஆசிரியர்கள் இவங்க கிட்ட டபுள் கவனமாய் இருங்க. குறைஞ்சு போயிடமாட்டீங்க. பணிச்சுமை பாட்டுக்கு இருந்துகொண்டேதாங்க இருக்கும். புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுங்க. வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். அவை நல்ல அனுபவங்கள் பொல்லாத அனுபவங்கள் என மிக்ஸ் ஆகிக்கிடைக்கும். வியாபாரீஸ்.. நீங்க தேங்கிக் கிடந்த சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். புகழ்பெற்ற நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களோட திறமைகளை வெளிப்படுத்த, புதிய வாய்ப்பு கிடைக்கும். நல்லபடியாப் பயன்படுத்திப்பீங்க..

விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம்

குடும்பத்திலாகட்டும்.. அலுவலகத்திலாகட்டும்.. ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துபோட்டுப் பார்க்கவேண்டி வரும். சளைக்காம செய்யறீங்க. அதுதான் உங்க பிளஸ் பாயின்ட். கூடிய சீக்கிரத்தில் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்; பழைய சம்பள பாக்கி கைக்கு வரும். ஹப்பாடா. எவ்ளோ காலம் இதுக்காகக் காத்துக்கிட்டு இருந்தீங்க. இப்ப ஹாப்பீயா??  செலவுகள் கட்டுப்படும். வருமானம் அதிகரிக்கும். உங்களின் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும், காதல் திருமணம் கைகூடும். திருமணம் ஆனவர் என்றால் கணவன் மனைவிக்குள் இனிய ஒற்றுமை நிலவும். அதிருஷ்ட தேவதை உங்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் புன்னகைப்பாள். எல்லாம் மெதுமெதுவாப் போகுதுன்னு குறைப்பட்டுக்கிட்டீங்களே. இப்ப சரியாப்போச்சா? இனி கவலையில்லைங்க.

தனுசு ராசி மூலம் நட்சத்திரம்

குடும்ப வாழ்வில் நெருக்கடிகள் ஏற்படலாம். எனினும் தொழில்சார்ந்த வாழ்வில் சிறந்த வெற்றிகளை அடைவீங்கப்பா. அலுவலகத்திலும் பாராட்டுக்கிடைக்கும். தள்ளித் தள்ளிப்போயிக்கிட்டிருந்த கல்யாணம் இதோ கிட்டே வரும்.  குடும்பம் மற்றும் ஆன்மீகம் தொடர்பான சில விஷங்களில் உங்கள் பணத்தை நீங்கள் முதலீடு செய்வீங்க. உங்களுக்கு வருமானமும் சேமிப்பும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவை இருக்காது. மாணவர்கள் தங்களுக்கேற்ற கல்வி நிறுவனங்களையும் பாடத்திட்டங்களை யும் புத்திசாலித்தனமான வகையில் தேர்ந்தெடுத்திருப்பதால் எதிர்காலம் அவர்களுக்கு அற்புதமான வகையில் அமையும். எதையும் நிறைய முயற்சிக்குப்பின்னரே அடைவீங்க. ஸோ வாட்?

தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்

இனி வரும் காலம் மிகவும் அமோகமாக அமைந்து விடும். எதைத் தொட்டாலும் வெற்றி நிச்சயம். ஆனாலும் நீங்க செய்ய வேண்டியதெல்லாம், எல்லா விஷயங்களிலும் சற்று பொறுமையாகக் காத்திருப்பதுதான்.   வெற்றி வாய்ப்புக்கள் சற்றே தாமதம் அடைந்தாலும் சக்ஸஸ் உறுதிங்க குடும்பம், காதல், உத்தியோகம் போன்ற விஷயங்களில் நிறைவு அளித்தாலும் நீங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது உங்களுடைய ஆரோக்கியத்தில்தான். பிசினஸ் மற்றும் உத்யோக விஷயங்களில் இந்த ஆண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும் வாய்ப்புக்கள் உள்ளன. திருமணம் ஆனவர்கள் மகப்பேற்றுக்குத் திட்டமிடலாம். நீங்கள் பணி செய்யுமிடத்தில் சில பிரச்சினைகளை சமாளிக்க நேரிடலாம்.

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதம்

உங்களோட புத்தி சாதுரியத்தினாலும் கடுமையான உழைப்பினாலும் எந்தப் பிரச்சினைகளில் இருந்தும் நீங்க வெளியேறுவீங்க. அனைவரிடமும் மிகவும் அன்பாகப் பழகுங்க.  உங்கள் நல்ல தன்மை உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தை வழிவகுக்கத் துணையாக நிற்கும். மாணவர்களுக்கு சாதகமான நிலை அமையுமுங்க. அமைதியாவும் அடக்கமாவும் இருங்க போதும்.  அடுத்தடுத்து வரும் காலத்தை நிம்மதியாகக் கடந்து செல்ல உங்களுடைய இந்தக் குணம் உதவி செய்யும்.. உங்களை நேசிப்பவர்கள் மற்றும் குடும்பத்தினர் உங்களுடைய பேச்சையும் போக்கையும் தவறாக எடுத்துக் கொள்ளும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே நீங்க உங்க நம்பிக்கைக்கு உரியவர்களுடன் மட்டுமே தொடர்புகளை வைச்சுக்குங்க. உங்க தொழில்.

மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் 2,3,4 ம் பாதம்

பேசும்போது கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க.  பண வரவு மற்றும் செலவு தொடர்பான விஷயங்களில் ஒவ்வொன்றையும் மிகவும் கவனமாய் ஆராய்ந்து பரிசீலித்து அப்புறமாய் எதையும் டிஸைட் செய்யுங்க. பெரிய அளவில் முதலீடு எதுவும் செய்யாமல் கவனமாக இருந்துக்குங்க. சிறிய அளவில் முதலீடு தேவைப்படும் வியாபாரங்கள் லாபம் அளிக்க சான்ஸ் இருக்குங்க. சில வழக்குகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புக்களும் இருக்கின்றன. எனவே மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். செலவுகளை இழுத்துப்பிடிங்க. அதிக அளவிலான பொறுப்புக்களை நீங்கள் பணிபுரியும் இடத்திலும் இல்லத்திலும் சுமக்கப் போகிறீர்கள். நீங்கள் செய்யாத காரியத்தில் கூட உங்கள் மீது பழி சுமத்தப்படும்.

மகரம் ராசி திருவோணம்  நட்சத்திரம் 

திடீர்னு ஒரு பண­வ­ரவு வந்து உங்­க சிர­மங்­களை குறைக்­கும். சந்தோஷமும் திருப்தியும் மனசில் மிகுந்­தி­ருக்­கும். நீங்க பிசினஸ் செய்பவர் என்றாலும் உத்யோகம் செய்பவர் என்றாலும், கொடுக்­கல் வாங்­க­லில் முன்­னெச்­ச­ரிக்கை  சற்று தேவைப்­ப­டுதுங்க. குடும்­பத்­தில் சந்­தோ­ஷம் நிறைஞ்சிருந்தாலும் சின்னச் சின்ன நிரடல்களை அவாய்ட் செய்ய முடியாது. பண வரவு, சுக­போ­கம் போன்ற நல்ல விஷயங்களும் கூடவே இருக்­கும். தொழில் ரீதி­யான சூழ்­நிலைகளில் கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டி வரும். எதிர்பாலினத்தவர்கைள் கிட்ட எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்­டும். மற்றவர்களின் ஃபேமிலி பிரச்­னை­க­ளில் தலை­யிட வேணாங்க. பொறு­மை­யு­டன் செயல்­ப­டு­வது உத்­த­மம். உங்­க முயற்­சி­கள் அனைத்­தும் வெற்றி பெறும்.

மகரம் ராசி திருவோணம்  நட்சத்திரம் பாதம் 1,2  

மகன், மகள் மூலம் குடும்­பத்­தில் மகிழ்ச்சி நில­வும். அலுவலகம் சார்ந்த எதிரிங்க விஷயத்தில் கொஞ்சமாச்சும் முன்­னெச்­ச­ரிக்கை­யுடன்        செயல்­ப­டுங்­க.. தேக ஆரோக்­யத்­தில் சற்று கவ­னம் தேவை. சுப­கா­ரிய முயற்­சி­க­ளில் முன்­னேற்­றம் வரும். குடும்ப பிரச்­னை­க­ளில் அனு­ச­ரித்­துப்­போ­வது உத்­த­மம். ஏ…கப்பட்ட செலவுங்க இருக்கு. ஆனால் பாதி வீட்டில் நடக்கவிருக்கும் சுப நிகழ்ச்சி காரணமாய்த்தான் இருக்கப்போகுது. நண்பர்கள் மற்றும் உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீங்க. சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதுப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீங்க.

கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் பாதம் 3, 4

திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். இட்ஸ் ஓகே. அதனால் என்ன? பயணங்களின்போது பெருட்களை மிகவும் ஜாக்கிரதையாக வைச்சுக்குங்க. சில நேரங்களில் கற்பனையாக நீங்களே ஏற்படுத்திக்கிட்ட காரணங்களால வீண் டென்ஷன், மனஉளைச்சல், செரிமானக் கோளாறு வந்து , பிறகு நல்லபடியாகச் சரியாயிடுமுங்க. மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். திட்டமிட்ட காரியங்களைச் சற்று அலைந்து திரிந்தே முடிக்கவேண்டி வரும். அதனால் என்னங்க. வெற்றிகரமாக முடிச்சுடுவீங்களே.  மகனின் அலட்சியப் போக்கு பற்றி எவ்ளோ கவலைப்பட்டீங்க.இப்ப அதெல்லாம் மாறியிருக்குமே.

கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் 

மகளின் – மகனின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீங்க. கடவுள் அருளால் செலவு பற்றிக் கவலைப்பட வேண்டிய தேவை இருக்காது. ஏதாவது கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். குலதெய்வக் கோயிலுக்குப் போவீங்க. பலகாலப் பிரார்த்தனைக்கு நல்லபடியாச் செலவு செய்வீங்க. பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகளும், அலைச்சலும். எதிர்ப்புகளும் வந்து நீங்கும். மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துப் போவது நல்லதுங்க. பிகாஸ் உங்க கணவர்/ மனைவி பக்கம்தான் நியாயம் நிச்சமா இருக்கும். மாணவர்கள் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். நண்பர்களிடம் பழகுவதில் சற்றே எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மனசில் உள்ளதைக் கொட்டணும்னு அவசியமே இல்லைங்க.

கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் பாதம் 1,2,3 

வியாபாரத்தில் முதலீடுகள் விஷயத்தில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்யுங்க. இப்போதைக்குக் கூட்டாகத் தொழில் செய்வதைத் தவிர்ப்பது நல்லதுங்க. நாள் செல்லச் செல்ல லாபம் அதிகரிக்கும். வியாபார விஷயமாக வெளிநாடு செல்லும் சான்ஸ் கிடைக்குங்க. உத்தியோகத்தில் நெருக்கடிகளும், பணிச்சுமையும் அதிகரிக்கும்தான். ஆனால் உயரதிகாரிகள் உங்கள் திறமையை நல்லபடியாத்தான் மதிப்பிடுவாங்க. சம்பள உயர்வுக்காக நீங்க எந்த முயற்சியும் எடுக்க வேண்டாங்க. தானாய் எல்லாம் கிடைக்கும். நிதி நிலைமை மிகவும் சாதகமாக இருக்கும். ஏனெனில் ஒன்றுக்கு மேற்பட்ட வருமானங்கள் வரும். வெளிநாட்டுத் தொடர்புடைய புதிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கலைஞர்கள் தங்களுடைய தனித் திறமையை சமீபத்தில் வளர்த்துக் கொண்டதால் இப்ப ஜமாய்ப்பீங்க. வருமானம் புகழ் ரெண்டு அதிகமாகுமே.

மீனம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் பாதம் 4 

மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யவேண்டாம். எஸ்பெஷலி ஆஃபீஸ்ல கேர்ஃபுல்லா இருங்க. ப்ளீஸ். குடும்பத்தில் ஹாப்பி இனி ஹாப்பி. விடாமுயற்சியால் வெற்றிவாய்ப்புகள் அதிகரிக்கும். பேச்சினால் லாபம் கூடும். பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். புது வேலை கிடைக்கும். அலுவலக விஷயங்களில்  இருந்து வந்த மனப் போராட்டங்கள் விலகி, உங்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள், வீண் விவாதங்கள் நீங்கி, அமைதியும் நிம்மதியும் சந்தோஷமும் நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். மகளின்  அல்லது மகனின் திருமணத்தை விமரிசையாக நடத்தி முடிப்பீங்க.

மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம்

உடல் ஆரோக்கியத்தில் முன்பிருந்த பிரச்சினைகள் குறையும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லதுங்க. நொடி நேரம் நீடிக்கப்போகும் கோபம்தான். ஆனால் அதன் விளைவைப்பற்றி யோசிச்சுப் பாருங்களேன். செல்வாக்கு அதிகமாகுங்க. வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்ள வைக்கும்படியான சம்பவங்கள் நடக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீங்க. அயல் நாட்டுக்கோ அல்லது  வேற்று மொழி பேசும் மாநிலத்திற்கோ செல்லும் வாய்ப்புக் கிடைக்குங்க. இத்தனை காலம் இழுத்துப் பறிச்சுக்கிட்டிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குறிப்பாய் அது  தந்தை வழி சொத்து பற்றியதுன்னா சந்தேகமின்றி உங்கள் தரப்புக்குத்தான் வெற்றி.

மீனம் ராசி ரேவதி நட்சத்திரம்

உங்க மனைவி அல்லது புருஷனின் வருமானம் உயரும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். மேடைமீது வெளுத்து வாங்குவீங்க. கைதட்டல் ஏகமாய்க் கிடைக்கப் போகுது. குழந்தைங்க உங்களை சந்தோஷப்படுத்துவாங்க. சில நேரங்களில் வீண் டென்ஷன், மனஉளைச்சல், செரிமானக் கோளாறு வந்து நீங்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். திட்டமிட்ட காரியங்களை சற்று அலைந்து திரிந்தே முடிக்கவேண்டி வரும். அதற்கு மனசளவில் தயாராயிடுங்க.  ஜாலியா அதை எதிர்கொள்வீங்க. எழுத்து மற்றும் சினிமாத்துறையில் உள்ளவங்களுக்குச் செல்லும் இடமெல்லாம் செல்வாக்குக் கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் மற்றும் பிரபலமானவங்க நட்பால் சில விஷயங்களை ஷ்யூராய் சாதித்துக் காட்டுவீங்க. குழந்தைங்களின் அலட்சியப் போக்கு மாறும். முழுப்பாசம் கிடைக்கக் கொஞ்சம் காத்திருங்களேன்?

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் ஆடியோ செய்தியாக கேட்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

 

அன்பர்கள் எல்லா வளமும் பெற்று வளமோடு வாழ குருபகவான் அருளுடன் பத்திரிகை.காம் இணையதளமும் வாழ்த்துகிறது…