நிவர் புயல் எதிரொலி: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு

சென்னை: நிவர் புயல் எதிரொலியாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தை அச்சுறுத்தி வரும் நிவர் புயலானது தற்போது புதுச்சேரிக்கு 370 கிலோ மீட்டர்  தொலைவிலும், சென்னைக்கு 420 கிலோ மீட்டர்  தொலைவிலும் உள்ளது. வடக்கு-வடமேற்கு நோக்கி தற்போது நகர்ந்து வரும் புயலானது, பின்னர் வடமேற்கு திசையில் நகரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புயல் அறிவிப்பை அடுத்து, கடலோர மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசும், புதுச்சேரி அரசும் மேற்கொண்டு உள்ளன. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவு ரயில்களும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அரசு அலுவலகங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இந்த விடுமுறை நீட்டிக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசின் அறிவிப்பை தொடர்ந்து இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.