டெல்லி:

நாளை அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில்,  நமது ஜனநாயகம் தெரிவிக்கும் சமிக்ஞை  என்ன? சிதம்பத்திற்கான உரிமை எங்கே? என்று, திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த சசிதரூர் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு இன்றுடன் 98 நாட்கள் ஆகிறது. அவரை ஜாமினில்கூட விடுவிக்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு காட்டி வருகிறது.

இந்த நிலையில், ப.சிதம்பரத்தை திகாருக்குச் சென்று இன்று காலை  சந்தித்ததாக, முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சசிதரூர்  டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், ப.சிதம்பரத்தை, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் தலைவர்  மணிஷ்திவாரியுடன் சென்று திகார் சிறையில் சந்தித்து பேசியதாகவும், அவரது 98 நாட்கள் சிறை வாழ்க்கை  மிகவும் மோசமானது,  சிதம்பரம் சிறையில்  நல்ல மனநிலையில், நல்ல திடகாத்திரத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  நாளை அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்ட உள்ளது, ஆனால் பிசிக்கு சுதந்திரம் எங்கே? இது நமது ஜனநாயகம் குறித்து என்ன சமிக்ஞையை அனுப்புகிறது? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.