நாளை: கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

       மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். அதுவே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மகிழ்ச்சி வெளியில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியவர் கிருஷ்ணர். நாம் என்னவாக இருக்கிறோமோ அதன் படியே நமக்கு காட்சி தருபவர்தான் கிருஷ்ணர்.

இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ணர் பிறந்த தினம் அஷ்டமி.

krishna-2

கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் உபதேசங்களே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது.

கிருஷ்ண ஜெயந்தி அன்று, அவருக்குப்  பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

அவருக்கு பிடித்த தின்பண்டங்களுடன் தயிர் சேர்த்தும், பாலையும் வெண்ணெயையும் கலந்தும் பக்தர்கள் ‘தஹிகலா’ தயாரிப்பதுண்டு. கிருஷ்ணர் மாடு மேய்க்கும்போது, கோபியர்கள் கொண்டுவரும் சாதங்களையும் கலந்து உண்பார். அதை இன்றும் பின்பற்றும் விதமாக, தஹிகலா தயாரிப்பது, வெண்ணெய் தாழியை உடைப்பது வழக்கத்தில் உள்ளது. இதுவே உறியடி விழாவாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணருக்கு வெண்ணெய் நிவேதனம் செய்யப்படுகிறது. கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். வரியைக் கட்ட மக்கள்  வெண்ணெய் விற்க வேண்டியதாயிற்று.                 கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணெயைத் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான்.  எதிர்த்துப் போராடும் குணத்தையும், அநீதியைப் பொறுத்துக் கொள்ளலாகாது என்ற பாடத்தையும் கற்பித்தான்.

தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி,கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில், குறிப்பாக, யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமிணர்கள் இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர் .தற்காலத்தில் தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ண ஜெயந்தி அன்று குருவாயூர் கோவிலுக்கு ஒரு லட்சம் அளவிலான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகின்றனர்.

கிருட்டிணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை,முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படு கின்றன.

கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் மக்கள் சாப்பிடாமல் விரதம் இருந்து நள்ளிரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதம் அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணெய், பால் போன்றவற்றை உண்டு விரதத்தை முடிப்பது வழக்கம்.

முதல்வர் ஜெயலலிதா கிருஷ்ணஜெயந்தி வாழ்த்து

முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  அனைத்து உயிர்களிடத்தும் நட்பும், கருணையும் உடையவனாய், நான் எனது என்ற பற்று நீங்கி, இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் கொண்டு, பொறுமையுடனும், மகிழ்ச்சியுடனும், இறைவனிடத்தில் மனதையும், மதியையும் அர்ப்பணித்து வாழ்ந்திட வேண்டுமென்ற கீத உபதேசத்தை மக்கள் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் தழைத்தோங்கும் என்பதனைத் தெரிவித்து, அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி