நாளை ஐயப்பனை தரிசிக்கிறார் “கன்னி சாமி” அன்புமணி

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இருமுடி கட்டி சபரிமலைக்கு கிளம்பியிருக்கிறார்.

பா.ம.க. இளைஞரணி தலைவரும் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி கடவுள் பக்தி மிகுந்தவர். சமீபத்தில் மனைவி சௌமியாவுடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். அந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியானது.

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இன்று சென்னையில் இருந்து புறப்பட்டார்.

கடந் மூன்று நாட்களுக்கு முன் சபரமலை ஐயப்பனுக்காக மாலை போட்டுக்கொண்ட அன்புமணி, இன்று மகாலிங்கபுரம் அய்யப்பன் கோயிலில் இருமுடிகட்டிக்கொண்டார்.

சென்னையில் இருந்து நான்கு இருபதுக்கு மதுரைக்குச் செல்லும் விமானத்தில் பயணிக்கும் அவர், அங்கிருந்து காரில் சபரிமலை செல்கிறார். அவருடன் மத்திய முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார், அன்புமணியின் அக்காள் மகன் முகுந்தன் ஆகியோரும் இருமுடிகட்டி சபரிமலைக்குச் செல்கின்றார்கள்.

இது குறித்து தனக்கு நெருங்கிய வட்டாரத்தில் அன்புமணி, “நாற்பத்தியெட்டு நாட்கள் மாலை போட்டு விரதம் இருக்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். பேத்தி பிறந்த சூழலில் சில சடங்குகள் இருந்ததால்  மூன்று நாட்களுக்கு முன்தான் மாலை போட்டேன். ஆனால் கடந்த பல மாதங்களாகவே விரதம் இருப்பதைப்போன்ற மனநிலையில்தான் இருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அன்புமணி, சபரிமலைக்குச் செல்வது இதுதான் முதல்முறை. அதாவது கன்னிசாமி அன்புமணி, நாளை ஐயப்பனை தரிசனம் செய்யப்போகிறார்.