நாளை வாக்குப்பதிவு: மதுக்கடைகள் மூடல், ஆனால் மது விநியோகம் அமோகம்…..

சென்னை:

மிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்று இரவு முதல் குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

ஆனால், பெரும்பாலான இடங்களில் கடைகளின் மெயின் ஷட்டர் மூடப்பட்டிருந்தாலும், எப்போதும் போலவே 24 மணி நேரமும் மது விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இதை காணும் காவலர்களும், நடவடிக்கை எடுக்காமல் கண்ணை மூடிக்கொள்கின்றனர்.

தமிழகத்தில் ஏற்கனவே லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவும் கடந்த மாதம் 18ந்தேதி முடிவடைந்தது. மீதமுள்ள அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை (மே.19ம் தேதி)  இடத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதோடு, நாடாளுமன்ற தேர்தலின் போது, சர்ச்சைக்குள்ளான 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இதையடுத்து, 4 தொகுதிகளில் உள்ள மதுகடைகளை நேற்று மாலை முதல் வாக்குப்பதிவு நேரம் முடியும் வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறுவாக்குப் பதிவு நடைபெறும் 13 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள மாவட்டங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ள மாவட்டங்களில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. வாக்குக்கு அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணம் அனைத்தும் மதுக்கடைகளில் தாராளமாக புழங்கி வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.