நாளை தைப்பொங்கல்: பொங்கல் வைக்க சரியான நேரம் எது?

தைத்திருநாளான பொங்கல் பண்டிகை நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக்க் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்படும் அதே நாளில் இந்தியா முழுவதும் அறுவடை விழா பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் லகோரி என்றும், அஸ்ஸாமில் போகாலி பிகு என்றும், உத்தர பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் பீகாரில் மகர் சங்கராந்தி என்றும், ஆந்திராவில் போகி என்றும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. கேரளாவில் இந்த நாளில் தான் மலையில் மகர ஜோதி ஏற்றப்பட்டு வழிபடப்படுகிறது.

ஆதிகாலத்திலேயே விவசாயிகள் அறுவடை விழா கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டி ருந்தார்கள். இதற்குப் பல காரணங்கள் இருந்தன.  ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு காவல் தேவதை இருப்பதாகவும் அதனிடம் வேண்டுதல் செய்தால் அறுவடை அதிகரிக்கும் என்றும் நம்பினார்கள்.

இதனடிப்படையில் தான் ஆதியில் அறுவடை விழாக்கள் இயற்கைக்கும், இயற்கையைப் பராமரிக்கும் தெய்வங்களுக்கும் ஆனந்தமளிப்பதற்காக நடத்தப்பட்டன. அதுவே இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கிராமங்களில் வீட்டின் முன்வாசல் பகுதியில் ஆதிகாலையிலேயே பொங்கலிட்டு சூரியன் உதிக்கும் வேளையில்படைப்பது வழக்கம். ஆனால்  சென்னை போன்ற நகரங்களில் அதற்கு வாய்ப்பில்லை என்பதால் வீடுகளினுள்ளேயே கேஸ் அடுப்பில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைத்து வணங்குகின்றனர்.

இந்த ஆண்டு பொங்கல் வைக்கும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை  காலை 7 முதல் 8 மணி வரை  சூரிய ஹோரை உள்ளது அந்த நேரத்தில் பொங்கலிடலாம் என்று தெரி விக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து காலை 8 மணி முதல் 9 வரை சுக்கிர ஹோரை உள்ளது. இது பூஜைக்கான நேரம் என்பதால் இந்த நேரத்தில் பொங்கல் படையலிட்டு பூஜை செய்வது நல்லது என ஆன்மிக பெரியோர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதைவிட்டால்,   மதியம் 12 முதல் 1 மணி வரை குரு ஹோரை நேரத்திலும் பொங்கலிட்டு வழிபடலாம் என கூறப்பட்டுள்ளது.

பொங்கும் மங்கலம் எல்லார் இல்லங்களிலும் தங்கட்டும். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்…