Random image

தமிழகம் முழுவதும் நாளை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்!

சென்னை:

மிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய நாளை  நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில், நாளை முதல் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி நாளை ( செப்டம்பர் 9)  மற்றும் 23ம் தேதி,  தொடர்ந்து அடுத்த மாதம் (அக்டோபர்)  7 மற்றும் 14ம் தேதி ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம்கள் அனைத்தும் வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது.

சென்னையில் 3754 வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.

காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என அறிந்து கொள்ளலாம்.
மேலும் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் படிவம் 6-ஐ பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

பெயர்களை நீக்கம் செய்ய படிவம் 7-ஐயும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்ய படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்ய வேண்டும். ஒரே தொகுதிக்குள் இடம் மாறி இருந்தால் படிவம் ‘8ஏ’ வை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

4 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களில், பொதுமக்கள் தங்கள் இருப்பிடம் அருகே உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து கொள்ள விண்ணப்பிக்கலாம்.

மற்ற நாட்களில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

மேலும், ’நே‌ஷனல் ஓட்டர்ஸ் போர்ட்டல்’ வழியாகவும் tn.election.gov.inஎன்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed