சென்னை:

ற்போதைய தமிழக அரசியலில்  கடும் வெயிலை விட அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நாளை 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு திக் திக் மனநிலையிலேயே சுழன்று வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பகீரத பிரயத்தனங்களில் இறங்கி உள்ளது.

அதே வேளையில், எடப்பாடி அரசை அகற்றிவிட்டு அரியணையில் ஏற திமுக வியூகங்களை வகுத்து வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்திருந்தபடி ஜூன் 3ந்தேதி ஆட்சியில் அமருவேன் என்ற கூற்றை உறுதியாக்கும் நோக்கில் அரசியல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதுபோன்ற அரசியல் நிகழ்வுகளால் நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையில் தொடர்ந்து வரும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு, நாளை வெளியாக உள்ள இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையே  தமிழகத்தை ஆட்சி செய்து வரும் மக்கள் விரோத எடப்பாடி அரசுக்கு வாழ்வா சாவா என்பதை தீர்மானிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 234 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. த ற்போதைய நிலையில், எடப்பாடி அரசுக்கு 113 உறுப்பினர் கள் ஆதரவு  மட்டுமே உள்ளது. இதன் காரணமாக அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழலே நிலவுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18எம்எல்ஏக்களின் சட்டமன்ற தொகுதி மற்றும் வேட்பாளர்கள் மரணம் காரணமாக காலியாக இருந்த 4 சட்டமன்ற தொகுதிகள் உள்பட 22  சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் முடிவடைந்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் முடிவை பொறுத்தே தமிழக அரசியல் மாற்றம் நிகழ உள்ளது. நாளை தேர்தல் முடிவே மாநில அரசாங்கத்தின் தலைவிதியை தீர்மானிக்க உள்ளது.

இதற்கிடையில், தற்போது வெளியாகி வரும் எக்சிட் போல் முடிவுகள் அனைத்தும், லோக் சபா தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்றும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் குறைந்த பட்சம் 15க்கும் மேற்பட்ட இடங்களை திமுக கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து வருகின்றன. இதன் காரணமாக ஆட்சியை கைப்பற்ற திமுக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி உள்ளது.

தற்போதைய சூழலில் அதிமுக அரசு ஆட்சியை தொடர குறைந்த பட்சம் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால்,  அதிமுகவுக்கு எத்தனை இடம் கிடைக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

குறைந்த பட்சம் 11 எம்எல்ஏக்கள் கிடைத்தால், அதிமுக அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், 11 தொகுதிகள் அதிமுகவுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், 22 தொகுதிகளில் 21 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றால், எடப்பாடி அரசு கவிழ்ந்து விடும் என்பதிலும் மாற்றுக் கருத்து கிடையது. அடுத்த நாளே ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோரிவிடுவார்.

தற்போதைய நிலையில்,  திமுகவிடம் 97 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மெஜாரிட்டிக்கு தேவையான 21உறுப்பினர்கள்  திமுகவுக்கு கிடைத்தால் (97+21=118)  திமுக மெஜாரிட்டி பெற்றுவிடும். இதன் காரணமாக எடப்பாடி அரசு கவிழ்ந்து திமுக ஆட்சி உதயமாகி விடும்…

ஒருவேளை திமுகவுக்கு 21 இடங்கள் கிடைகாமல் குறைந்த அளவிலான இடங்கள் கிடைத்தால், ஆட்சி கட்டிலில் அமர்ந்தே ஆக வேண்டும் என்று காய் நகர்த்தி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேறு வகையில் எடப்பாடி அரசை கவிழ்க்க முயற்சி செய்யலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

இந்த 22 தொகுதிகளில் குறைந்தபட்சம் 15 இடங்கள் திமுகவுக்கு கிடைத்தால் கூட, எடப்படி ஆட்சியை அகற்ற வாய்ப்பு உள்ளது. எப்படியென்றால், அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ், தணியரசு, தமீமும் அன்சாரி ஆகிய 3 பேர் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்ற திமுக முயற்சி செய்யும் என தகவல்களும் பரவி வருகின்றன.

அல்லது, சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்  டிடிவி ஆதரவுடன் 3 அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவுடனும் பெரும்பான்மை வாக்கெடுப்பின்போது, எடப்பாடி ஆட்சியை கவிழ்த்துவிட்டு  திமுக அரியணையை பிடிக்கலாம் என்றும் அரசியல் திறனாய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

தற்போதைய சூழலில், டிடிவி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்களான  ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 அதிமுக எம்எல்ஏக்கள் மீது அதிமுக கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சி செய்தது. இதன் காரணமாக அதிமுக தனது அரசை மேலும் சில மாதங்கள் ஓட்டலாம் என கனவு கண்டது. ஆனால், அவர்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், தற்போதைய நிலையில் அந்த 3 எம்எல்ஏக்களும் கட்சி சாராதவர்களாகவே கருதப்படலாம்.

இந்த சந்தர்ப்த்தை பயன்படுத்தி, திமுக தற்போது உள்ள 97 எம்எல்ஏக்களுடன், டிடிவி மற்றும் 3 அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் கருணாஸ், தணியரசு, தமீம் அன்சாரி ஆகியோர் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சிக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

என்ன நடக்கப்போகிறது என்பது நாளை இரவுக்குள் தெரிய வரும்… ஸ்டாலினின் கனவு நிறைவேறுமா என்பதும் ஓரிரு நாளில்  தெரிய வரும்…. எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு தொடருமா அல்லது கவிழுமா என்பது குறித்து வரும் 24ந்தேதி முடிவு தெரிந்து விடும்.

சமீபகாலமாக  அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, தமிமும் அன்சாரி, கருணாஸ், தணியரசு ஆகியோர் எடப்பாடி அரசுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்தால், ஆளுங்கட்சிக்கு எதிராகவே களமிறங்குவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.