நாளை விநாயகர் சதுர்த்தி: முதல்வர் எடப்பாடி வாழ்த்து
சென்னை:
நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப் பட உள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
முதல்வர் எடப்பாடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஞான முதல்வனாகிய விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை தம் திருவுருவாய்க் கொண்ட விநாயகப் பெருமானின் திரு அவதார தினமான இந்நன்னாளில் களிமண்ணால் செய்யப் பட்ட விநாயகர் சிலையை வைத்து, அருகம் புல், எருக்கம் பூ, செம்பரத்திப் பூ, வில்வ இலை போன்றவைகளைக் கொண்டு பூஜை செய்து, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், கரும்பு, பழங்கள் போன்றவற்றை படையலிட்டு, மக்கள் விநாயகர் சதுர்த்தி திருநாளை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.
வேழ முகத்து விநாயகனைத் தொழ… வாழ்வு மிகுந்து வரும் என்பதற்கேற்ப, விநாயகப் பெருமானின் திருவருளால் மக்கள் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் கூறி உள்ளார்.