நாளை குடியரசு தின விழா: சென்னையில் 5ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சென்னை:

நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. சென்னை கடற்கரை சாலையான காமராஜர் சாலையிலும் குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  இதையொட்டி சென்னையில்  சுமார் 5ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தலைநகர் டில்லியில் குடியரசு தின விழாவை சீர்குலைக்க முயன்றதாக 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்ட நிலையில்,  குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை  மெரினா, காமராஜர் சாலையில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் பகுதி உள்பட  பட இடங்களில்  5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

மேலும் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள்,  முக்கிய பேருந்து நிலையங்கள், விமான நிலையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்புப் படையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.