நாளை உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பரபரப்பில் அரசியல் கட்சிகள்

சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் முடிவை எண்ணி  அரசியல் கட்சிகள் பரபரப்பாக காணப்படுகின்றன.

தமிழகத்தில் 3ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு காரணமாக தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை அறிவித்தது. முதல்கட்டமாக ஊரகப்பகுதிகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ந்தேதி மற்றும் 30ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சிப் பதவி இடங்களை நிரப்ப இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 76.19 சதவீதமும், 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.

புகார்களின் அடிப்படையில் 30 இடங்களுக்கு நேற்று முன்தினம் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று 9 வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த வாக்குகள் அனைத்தும் நாளை (ஜனவரி 2) எண்ணப்பட உள்ளது.

இதற்கிடையில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள 315 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் அனைத்தும், 315 வாக்கு எண்ணும் மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.

நாளை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. அரசியல் கட்சி முகவர்களின்  முன்னிலையில் வாக்குப்பெட்டிகளின் சீல் உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கி மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் நடக்கும் நிகழ்வுகள் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு அறையிலும் 2 கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணும் பணி பதிவு செய்யப்படுகிறது. இதன் காரணமாக தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து அரசியல் கட்சியினர் பரபரப்பாக காணப்படுகின்றனர்.

2 கட்டங்களாக நடைபெற்றுள்ள ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில், உள்ளாட்சி பதவிகளுக்கு 18,570 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.