டில்லி

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ஒருநாள் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு உள்ளது.  இந்த வேளான் சட்டங்களால் வேளாண் துறை தனியார் வசம் சிக்கி விடும் என அஞ்சும் விவசாயிகள் அதைத் திரும்பப் பெறக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டில்லியில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளின் போராட்டம் கடந்த 17 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   கடந்த 7 ஆம் தேதி போராடும் விவசாயிகளை டில்லி முதல்வர் நேரில் சென்று பார்த்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.

அதன் பிறகு அவரை டில்லி போலீசார் வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாகவும் அவரது வீட்டில் இருந்து யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை எனவும் ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டினர்.  இதை டில்லி காவல்துறையினர் மறுத்தனர்.

இந்நிலையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.   வேளான் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ஆம் ஆத்மி கட்சியினரும் பொதுமக்களும் உண்ணாவிரதம் இருக்கவேண்டும் எனக் கூறி உள்ளார்.