வெகுவிரைவில் வைரஸ் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா:

கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து வெகு விரைவில் பேசி, வைரசை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக அளவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில், சீனாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையும், 77,658 ஆக அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதாரக் குழுவினர் ஹூபெய் மாகாணத்தின் வுகான் நகரில் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆய்வு செய்தனர். ஒரு வாரமாக ஆய்வு மேற்கொண்டிருக்கும் இந்தக் குழு சீனாவின் தலைநகரான பீஜிங் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றுள்ளது.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஜெனீவாவில் செய்தி மாநாட்டில் பேசினார். அப்போது அவர், தொற்றுநோய் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது உண்மைகளுக்கு பொருந்தாது ஒன்று என்றும், தொற்று நோயை தடுக்க தயாராகும் போது நாம் வைரசை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நாடுகளின் ஒன்றான ஈரானில் உள்ள குவாம் நகரில் கொரோனா பரவியத்தொடங்கியது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், 61 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸ் பரவுவதை தடுக்க அந்நாட்டில் உள்ள 10-க்கும் அதிகமான மாகாணங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி மையங்களும் தற்காலிமாக மூடப்பட்டு உள்ளன.

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால திட்டத்தின் தலைவரான டாக்டர் மைக் ரியான், ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்தே உயிரிழப்பு அதிகரித்துள்ளது என்றார். உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த குழுவினர் இன்று ஈரான் சென்று கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.