Random image

மூத்த மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் உடல்நிலை பாதிப்பு…..லண்டனில் தீவிர சிகிச்சை

டில்லி:

மூத்த மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் உடல் நல பாதிப்பு காரணமாக லண்டனில் தீவிர சிகிச்சை பெற்று வரும் தகவல் வெளியாகியுள்ளது.

2104ம் ஆண்டு மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தது. முந்தைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் இடம்பெற்ற சில மூத்த அமைச்சர்கள் மோடி அமைச்சரவையிலும் இடம்பெற்றனர். இதில் மூத்த அமைச்சர் ஆனந்த் குமாரும் ஒருவர். தற்போது இவர் நாடாளுமன்ற விவகாரத் துறை மற்றும் ரசாயனம், உரத் துறை அமைச்சராக உள்ளார்.

59 வயதாகும் இவருக்கு உடல் நிலை பாதித்துள்ளது. இதனால் அவர் லண்டனில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு கணைய புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் அவர் அமெரிக்காவுக்கு மாற்றப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர சிகிச்சை பெற்ற அமெரிக்கா மருத்துவமனையிலேயே இவரையும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அரசு கோப்புகளில் அமைச்சர் குமார் கையெழுத்திட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அவரது இலாக்காவை வேறு ஒரு அமைச்சருக்கு மாற்ற வேண்டிய நிலை பிரதமர் மோடிக்கு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி சிறுநீரக கோளாளால் அவதிப்பட்டு வந்தபோது நோய் குறித்த முழு விபரங்களை அரசு தெரிவிக்காமல் இருந்தது. அதேபோல் தற்போதும் ஆனந்த் குமார் விஷயத்தில் நோய் குறித்த விபரங்களை பகிரங்கமாக வெளியிடாமல் மத்திய அரசு மவுனம் காத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.