சென்னையில் மொத்த வாக்காளர்கள் 39,40,704 பேர்: மாற்றுத்திறனாளிகள் பெயர் சேர்க்க 31ந்தேதி வரை சிறப்பு முகாம்கள்…

சென்னை: சென்னையில் மொத்த வாக்காளர்கள் 39,40,704  என்று இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சென்னை மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய ஜனவரி 21 முதல் 31ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன என்று சென்னை சென்னை மாநகராட்சி ஆணையாளர் அறிவித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி சென்னை  மாவட்டத்திற்குபட்ட  16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்டத் தேர்தல் அலுவலர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இன்று வெளியிட்டார்.

சென்னையின் மிகப்பெரிய தொகுதி சோழிங்கநல்லூர் தொகுதி, சிறிய தொகுதி துறைமுகம் தொகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

“இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள், 2021-ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல்கள் கடந்த நவ.16 அன்று வெளியிடப்பட்டன.

ஜன.01 அன்று தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து உரிய படிவங்கள் நவ.16/2020 முதல் டிச.15/2020 முடிய பெறப்பட்டன.

அவ்வாறு பெறப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரால் நேரடி ஆய்விற்கு பின்னர் சட்டப்பேரவைத் தொகுதியினைச் சார்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்களால் படிவங்கள் ஏற்பு அல்லது நிராகரிப்பு குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

ஏற்பளிப்பு செய்யப்பட்ட படிவங்கள் அடிப்படையில் 2021-ம் ஆண்டிற்கான துணைப் பட்டியல்களுடனான இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

அத்துணைப் பட்டியல்களுடனான இறுதிப் பட்டியல் இன்று (20.01.2021) வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மண்டல அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பார்த்து கொள்ளலாம்.

கடந்த 16.11.2020 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சென்னை மாவட்டத்தினைச் சார்ந்த 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மொத்த வாக்காளர்களது எண்ணிக்கை விவரம்.

மொத்த வாக்காளர்கள் 39 லட்சத்து 40 ஆயிரத்து 704 பேர்.

ஆண் வாக்காளர்கள் 19 லட்சத்து 39 ஆயிரத்து 694 பேர்.

பெண் வாக்காளர்கள் 19 லட்சத்து 99 ஆயிரத்து 995 பேர்.

இதர வாக்காளர்கள் (மாற்றுப் பாலினத்தவர்) 1,015 பேர்.

2021-ம் ஆண்டு சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பாக 1,57,887 பெயர் சேர்த்தல் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

அதன் விவரம் கீழ்வருமாறு:

ஆண்கள் 77,136 பேர், பெண்கள் 80,669 பேர், இதரர் (மாற்றுப் பாலினத்தவர்) 82 பேர்.

மொத்தம் 1,57,887 பேர்.

மேற்படி பெறப்பட்ட படிவங்கள் மீது உரிய ஆணை பிறப்பிக்கபட்டு துணைப் பட்டியல்களில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்களது எண்ணிக்கை 1,57,169.

அதன் விவரம் கீழ்வருமாறு:

ஆண்கள் 76,777 பேர், பெண்கள் 80,310 பேர், இதரர் (மாற்றுப் பாலினத்தவர்) 82 பேர்.

மொத்தம் 1,57,169 பேர்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களது கள ஆய்வின்போது கண்டறியப்பட்ட இடம் பெயர்ந்தோர், காலமானோர் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளில் இடம் பெற்றோர் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் பெயர் நீக்கம் செய்யக் கோரி வரப்பெற்ற படிவம்-7ன் எண்ணிக்கை 41,009 ஆகும்.

அவற்றில் வாக்காளர் பதிவு அலுவலர்களது விசாரணைக்குப் பின்னர் வாக்காளர் பட்டியல்களிலிருந்து பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 40,513 ஆகும். மேலும், எந்தப் பெயர்களும் தகுதியின்மை அடிப்படையில் தன்னிச்சையாக (SUO-MOTU) நீக்கம் செய்யப்படவில்லை.

மேலும் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட வில்லிவாக்கம், அண்ணாநகர், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மற்றும் ஆயிரம் விளக்கு ஆகிய ஐந்து தொகுதிகளில் உள்ள ஆற்றோரப் பகுதிகளில் வாழ்ந்து வந்த நிரந்தரமாக பெரும்பாக்கம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் மறுகுடியமர்வு செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் 12 ஆயிரத்து 32 நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இவ்வாறு அனைத்துத் தொகுதிகளிலும் உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து உரிய நடைமுறையைப் பின்பற்றி இறந்துபோன, நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் மற்றும் பல முறை பட்டியலில் பதிவுகள் ஆகிய பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு அவர்களின் மொத்த எண்ணிக்கை விவரங்கள்.

  1. ஆண்கள் 20,890
  2. பெண்கள் 19,607
  3. இதரர் 16

மொத்தம் 40,513.

40,513க்கும் மேற்பட்ட நீக்கம் செய்யப்பட்ட பெயர்களில் 13 ஆயிரத்து 335 பேர் இறந்தவர்கள், 24 ஆயிரத்து 704 பேர் நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் மற்றும் 2,474 பேர் பலமுறை பட்டியலில் பதிவு செய்தவர்கள் ஆவர்.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு செய்திக்குறிப்பில், சென்னை மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய ஜனவரி 21 முதல் 31ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.