போலீஸ் நடவடிக்கையின் போது சேதமடைந்த மொத்த சொத்துக்களின் மதிப்பீடு ரூ. 2.66 கோடி: ஜாமியா

 

 

புதுடெல்லி:  கடந்த டிசம்பர் 15ம் தேதி ஜாமியா வளாகத்தினுள் நடந்த போலீஸ் நடவடிக்கையின் போது ரூ. 2.66 கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக பல்கலைக்கழகம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு சமர்ப்பித்த மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் சேதமடைந்த 25 சிசிடிவி கேமராக்களின் மதிப்பீடு மட்டும் ரூ.4.75 லட்சம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே, ஜாமியாவின் சிசிடிவி காட்சிகளிலிருந்து பல வீடியோ கிளிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.  அவற்றில், சீருடை அணிந்த சில நபர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையும், பல்கலைக்கழக நூலகத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட சொத்துக்களை லத்திகள் கொண்டு தாக்கி சேதப்படுத்துவதையும் காட்டுகிறது.

ஆனால் போலீசாரோ சில வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவதாகவும், அவற்றின் நம்பகத்தன்மை இன்னும் உறுதி செய்யப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்

ஜாமியா சமர்ப்பித்த மதிப்பீட்டின் படி, வன்முறையில் சேதமடைந்துள்ள பொது சொத்துக்களின் மதிப்பு ரூ.2,66,16,390 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் சார்பில், “டிசம்பர் 15, 2019 அன்று டெல்லி காவல்துறையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விளைவாக இந்த சேதம் ஏற்பட்டுள்ளது“, என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் அனுமதியின்றி வளாகத்தினுள் நுழைந்ததாகப் பல்கலைக்கழகம் கூறியுள்ள நிலையில், போலீசாரோ “கலகக்காரர்களை“ பின்தொடர்ந்து வந்ததாகவும் கூறுகின்றனர்.

வன்முறை நடந்த சில நாட்களுக்குப் பிறகு, பல்கலைக்கழக அதிகாரிகள், தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் சேதம் ஏற்பட்ட மொத்த சொத்துக்களின் மதிப்பீடு சுமார் ரூ. 2.5 கோடி என்றும், விரிவான கணக்கீடுகள் செய்யப்படும் என்றும் கூறியிருந்தனர்.  பல்கலைக்கழக நூலகர் தாரிக் அஷ்ரஃப் கூறியதாவது, “நூலகத்தில் பெரும்பாலான சேதங்கள் கண்ணாடி பலகங்களை உடைத்ததால் ஏற்பட்டதாகவும் மற்றவை சிசிடிவி கேமராக்கள் மற்றும் டியூப்லைட்டுகள் போன்றவைகளை அடித்து நொறுக்கியதால் ஏற்றபட்டது. நல்ல வேளையாக, புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் எதுவும் தொடப்படவில்லை.“