சென்னை: கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 2-வது நாளான இன்று, தமிழகத்தில் 3030 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இயக்கம் நேற்று தொடங்கியது. முதல் நாளன்று நேற்று தமிழகத்தில் 166 மையங்களிலும் ஒவ்வொரு மையத்திலும் 100 பேர் வீதம் மொத்தம் 16,600 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் மாநிலம் முழுவதும் 2,783 பேர் மட்டுமே தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர். தலைசிறந்த மருத்துவர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டு மற்றவர்களை ஊக்கமூட்டினர். முதல் நாளன்று ஊசி போட்டுக்கொண்டவர்களின் அளவு 16.8 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டது.

நெல்லை, திருச்சியில் முதல் நாளன்று ஒருவர் கூட ஊசி போட்டுக்கொள்ள முன் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. சென்னையில் முதல் நாளன்று அதிகமாக 310 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இருவர் மட்டுமே ஊசியை போட்டுக் கொள்ள முன்வந்தனர்.

2வது நாளான இன்று திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி இயக்கத்தை பார்வையிட்ட சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அந்த ஊசியை போட்டுக் கொண்டார். தமிழகத்தில் 2வது நாளாக இன்று 3030 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அவர்களில் 2847 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 183 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டது. சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் 36 பேரும், நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 26 பேரும், கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் 40 பேரும், செங்கல்பட்டில் 20 பேரும், தஞ்சையில் 60 பேரும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.