டெல்லி:

வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் வக்கீல்களை தகுதி நீக்கம் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்ற பரிந்துரைகளை திரும்ப பெறுவதாக இந்திய பார் கவுன்சில் தலைவர் மேனன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

வக்கீல்கள் சட்டம் உருவாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அதற்கான பரிந்துரைகளை வழங்குமாறு இந்திய பார் கவுன்சிலுக்கு சட்ட ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இதன் அடிப்படையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் வக்கீல்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். போலி வக்கீல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற பரிந்துரைகளை பிசிஐ தலைவர் மேனன் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிசிஐ முன் ஆயிரக்கணக்கான வக்கீல்கள் கூடி போரட்டம் நடத்தினர். போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி அவர்களை கட்டுப்படுத்தினர். எனினும் வக்கீல்கள் மேனன் மிஸ்ரா உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அனைத்து மாவட்ட நீதிமன்றங்களின் பார் வக்கீல்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். மேனன் மிஸ்ரா தனது பரிந்துரைகளை வாபஸ் பெற வில்லை என்றால் நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று ஒருங்கிணைப்பு குழுவினர் எச்சரித்தனர்.

இதைத்தொடர்ந்து மேனன் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ நான் உங்களில் ஒருவன். வக்கீல்களுக்கு எதிராக செயல்படமாட்டேன். வரும் 31ம் தேதி பிசிஐ கூட்டம் இருக்கிறது. அதில் நான் எனது பரிந்துரைகளை திரும்ப பெறுவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கேட்டதை தொடர்ந்து மிஸ்ரா அறிக்கை வெளியிட்டார். அதோடு வக்கீல்களுக்கான பென்சன் திட்டத்தையும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்று மிஸ்ரா தெரிவித்தார்.