புதுடெல்லி: தமிழகத்தின் மாற்றுத்திறனாளி தடகள வீரர் மாரியப்பன், கிரிக்கெட்டின் ரோகித் ஷர்மா, மல்யுத்த வினிஷ் போகட், ஹாக்கியின் ராணி ராம்பால், டேபிள் டென்னிஸின் மாணிக் பத்ரா ஆகிய 5 நபர்கள் கேல்ரத்னா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரையில், இப்படி ஒட்டுமொத்தமாக 5 விளையாட்டு வீரர் – வீராங்கனைகள் கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ம் ஆண்டின் ராஜீவ் கேல்ரத்னா விருது பேட்மின்டன் சிந்து, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், துப்பாக்கிச் சுடும் வீரர் ஜித்துராய், மல்யுத்த வீராங்கனை சாக்ஸி மாலிக் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த முறை 5 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், அர்ஜூனா விருதுக்கு ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டுள்ளார்.

இதில், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் 4வது வீரர் ரோஹித் ஷர்மா ஆவார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, விராத் கோலி ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.