Random image

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 8 பேருக்கு கொரோனா – ஆனாலும் நியூசிலாந்து பயணத்திற்கு ஆபத்தில்லையாம்!

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் குழுவில், இதுவரை மொத்தம் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தானின் திட்டத்திற்கு ஆபத்தில்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூசிலாந்து நாட்டில் மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக சுற்றுப்பயணம் செய்யவுள்ளது பாகிஸ்தான் அணி.

இந்நிலையில், சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவுள்ள குழுவினரில், மொத்தம் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, திட்டமிட்டப்படி, பாகிஸ்தான் அணியினர் நியூசிலாந்து செல்வார்களா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சு நடந்து வருவதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

நியூசிலாந்திற்கு செல்லவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் குழுவில் மொத்தம் 54 பேர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.