ராமநாதபுரம்: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தடை செய்யப்பட்ட தனுஷ்கோடி, சுமார்  9 மாதங்களுக்கு பிறகு இன்று  சுற்றுலா பயணிகள்  செல்ல மாவட்ட நிர்வாகம்  அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா  பரவல் தடுப்பு நடவடிக்கையாக  கடந்த  மார்ச் 25 முதல் நாடு முழுவதும முழு அடைப்பு அறிவிக்கப்பட்டது.  பின்னர், மத்திய மாநில அரசுகள் வழங்கி வரும் தளர்வுகள் காரணமாக கடந்த நவம்பர் 1ந்தேதி முதல் மாநிலங்களில் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சுற்றுலாத்தலங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.  ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில்,  டிசம்பர் 14ந்தேதி முதல் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், 274 நாட்களுக்குப் பிறகு, தனுஷ்கோடி கடற்கரை பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.