குற்றாலத்தில் உள்ள ஐந்தருவியில் தண்ணீர் விழ தொடங்கியதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதும் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் ஆரம்பமாகும். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் குற்றாலத்தில் சீசன் நிலவும். அப்போது மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அவ்வப்போது சாரல் மழை பெய்வதுடன் குளிர்ந்த காற்று வீசி தட்பவெப்பநிலை குளுகுளுவென இருக்கும்.

சீசன் குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர் மூலிகை மகத்துவம் வாய்ந்தது என்பதாலும், அதில் குளித்தால் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை தரும் என்பதாலும் இங்கு குளிப்பதற்காக தமிழகம் மட்டுமன்றி கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.

கடந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் சீசன் தொடங்கியது. ஆனால் இடையிடையே அருவிகளில் தண்ணீர் விழாததால் சீசன் சுமாராகவே இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கோடை வெயில் கடுமையாக அடித்ததாலும், கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தாமதமானதாலும் வழக்கம் போல் ஜூன் மாதம் குற்றால சீசன் தொடங்கவில்லை.

இதனால் குற்றாலத்தில் தண்ணீர் விழாமல் பாறைகளாகவே காட்சியளித்தது. இந்தநிலையில் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், பாவூர்சத்திரம், ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவில் இருந்து சாரல் மழை பெய்தபடி இருந்தது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான அச்சன் புதூர், வடகரை, பண்பொழி, இடைகால், இலத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் சாரல் மழை தூறியபடி இருப்பதால் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவியது.

குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்தபடி இருக்கிறது. குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. குற்றாலம் மலைப் பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் விழ தொடங்கியுள்ளது.

ஐந்தருவியில் ஆண்கள் குளிக்க கூடிய பகுதியில் உள்ள இரு கிளைகளில் இன்று காலை முதல் தண்ணீர் விழுகிறது. பெண்கள் குளிக்கும் பிரிவில் தண்ணீர் விழவில்லை. இதனால் தண்ணீர் விழும் பகுதியில் பெண்கள் மற்றும் ஆண்கள் குளிக்கும் வகையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் தண்ணீர் விழ தொடங்கியதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.