டிராக்டரை பறிமுதல் செய்த நிதிநிறுவனம்: தற்கொலைக்கு முயன்ற ‘கஜா’ பாதித்த விவசாயி

வேதாரண்யம்:

ஜா புயல் பாதிப்பதால் தங்களது வாழ்வாதாரங்களை இழந்த விவசாயி ஒருவர்  நிதிநிறுவனத்தில் பெற்ற கடன்மூலம் வாங்கிய டிராக்டருக்கு ஒரு மாதம் தவணை கட்டாததால், நிதி நிறுவன  ஊழியர்கள் விவசாயிடம் இருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதன் காரணமாக அந்த விவசாயி  தற்கொலைக்கு முயன்றார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலைக்கு முயன்ற விவசாயி

தமிழகத்தில் நாகை மாவட்டம் குறிப்பாக வேதாரண்யதை சூறையாடிச் சென்ற கஜா புயல் காரணமாக அந்த பகுதி விவசாயிகள் வரலாறு காணாத சேதங்களை சந்தித்துள்ளனர். அவர்கள் இன்னும் தங்களது இயல்பு நிலைக்கே திரும்பாத நிலையில், கடன் கேட்டு வங்கி ஊழியர்கள் அவரகளை தொல்லைப்படுத்துவது அதிகரித்து வருகிறது.

கஜா புயல் பாதித்த பகுதிகளில் வங்கி கடனுக்கான தவணை செலுத்துவதில் சலுகை அளிக்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது. ஆனாலும், வங்கிகள் அரசின் அறிவிப்பை மதிக்காமல் விவசாயிகளை துன்புறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள வடமழை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி  செந்தில்நாதன் என்பவர், சோழமண்டலம் நிதி நிறுவனத்தில் கடன்பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார். இவர் ஒரு மாதம் மட்டுமே கடன் தவணையை கட்டாமல் இருந்த நிலையில், நிதி நிறுவன ஊழியர்கள்  அவரிடம் இருந்து நிதிநிறுவன ஊழியர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான செந்தில்நாதன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிக்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளிடம் கெடுபிடி காட்டும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.