தொழிலாளர் சட்டங்கள் ரத்துக்கு எதிர்ப்பு: மே 22ல் நாடு தழுவிய போராட்டம் அறிவித்த தொழிற்சங்கங்கள்

டெல்லி: தொழிலாளர் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் மே 22 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து உள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு தொழிலாளர் சட்டங்களுக்கு மொத்தமாக விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தை அம்மாநில அரசு கொண்டுவந்துள்ளது. பொருளாதார நடவடிக்கைகளை மையமாக வைத்து மத்தியப் பிரதேசம் சில விதிகளை மாற்றியமைத்துள்ளது.

குஜராத், திரிபுரா மற்றும் பல மாநிலங்களும் இதைப் பின்பற்றுகின்றன. இந் நிலையில், தொழிலாளர் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதை எதிர்த்து தொழிற்சங்கங்கள் மே 22 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.

மே 22 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு 10 மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன, மேலும் இந்த விஷயத்தை சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கு கொண்டு செல்லவும் முடிவு செய்தன.

மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் நடத்திய கூட்டத்தில், லாக்டவுன் காலத்தில் உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 தொழிற்சங்கங்களின் தேசிய அளவிலான தலைவர்கள் மே 22 அன்று டெல்லியின் ராஜ்காட் காந்தி சமாதியில் ஒரு நாள் உண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்வார்கள். ஒரே நேரத்தில் போராட்டங்கள் அனைத்து மாநிலங்களிலும் கூட்டாக ஏற்பாடு செய்யப்படும்.

இந்த அறிவிப்பை NTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF மற்றும் UTUC ஆகிய பத்து மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. ஆர்.எஸ்.எஸ் ஆதரவு கொண்ட பாரதிய மஜ்தூர் சங்கமும் மே 20 அன்று தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்வதற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.