கை சுத்திகரிப்பானை பதுக்கியவருக்கு அளிக்கப்பட்ட நூதன தண்டனை

நியூயார்க்

மெரிக்காவை சேர்ந்த ஒரு வர்த்தகர் கை சுத்திகரிப்பானை அதிக விலைக்கு விற்பனை செய்ய  பதுக்கியதால் அவர் 17000 சுத்திகரிப்பானை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வேகமாகப் பரவி வரும் கோரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.   தற்போது கை சுத்திகரிப்பான் மிகவும் அதிக அளவில் விற்பனை ஆகின்றது.   இதையொட்டி அமெரிக்காவில் ஒரு சிலர் கை சுத்திகரிப்பானைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்க முயல்வதாகத் தகவல்கள் வெளியாகின.  எனவே அரசு இதைக் கண்காணித்து வந்தது.

அமெரிக்காவில் மட் மற்றும் நோவா காவின் என்னும் இரு சகோதரர்கள் ஒரு வர்த்தக நிறுவனத்தை நடத்தி வந்தனர்.  இந்நிறுவனம் இணையம் மூலம் கை சுத்திகரிப்பானை அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டு விசாரணை நடந்ததில் நிறுவனம் ஏராளமான கை சுத்திகரிப்பானை பதுக்கி உள்ளது தெரிய வந்தது.

கடந்த 1 ஆம் தேதி அமெரிக்காவில் முதல் கோரோனா மரணம் நிகழ்ந்ததில் இருந்து கை சுத்திகரிப்பான், முகக் கவசம், உள்ளிட்ட பொருட்கள் அத்தியாவசியப் பொருட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன.  எனவே அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்குவதற்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

மேலும் இந்த வர்த்தகருக்கு தன்னிடமுள்ள 17000 கை சுத்திகரிப்பானைப் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.  அதற்கிணங்க இந்த நிறுவனம் அமெரிக்காவின் இரு மாகாணங்களில் கடந்த 3  நாட்களாக தங்களிடமுள்ள கை சுத்திகரிப்பானை இலவசமாக வழங்கி வருகிறது.