சென்னை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது  மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூட்டை கண்டித்து, நாளை தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை  தெரிவிப்போம் என்று வணிகர்கள் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள 30 லட்சம் வணிகர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், நாளை கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது என்று கூறி உள்ளார்.

சாமானிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு, பின்புலமாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் பண பலம் இருப்பதாகவும் தெரிகிறது என்று குற்றம் சாட்டிய வெள்ளையன், தூத்துக்குடி மக்களின் போராட்டத்துக்கு வணிகர்களின் ஆதரவு தொடரும் என்றும் கூறி உள்ளார்.