கோவையில் மத்திய அச்சகம் இடமாற்றம்: வணிகர்கள் கடையடைப்பு!

கோவை:

கோவையில் அமைந்துள்ள  மத்திய அச்சகத்தை இடமாற்றி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் இன்று கடையை அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

கோவையில் உள்ள, இந்திய அரசு அச்சகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள இந்திய அரசு அச்சகத்துக்கு கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர்.

முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கோவை  பெரியநாயக்கன் பாளையத்தில் மத்திய அரசின் அச்சம் கொண்டு வரப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நிதிஆயோக் ஆலோசனைப்படி  நாட்டிலுள்ள 17 அச்சகங்களை 5 ஆக குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி முதல்கட்டமாக தமிழகத்தில் கோவை, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இயங்கிவரும் அச்சகங்கள் மூடப்பட்டு அவற்றின் பணிகள் நாசிக்கில் உள்ள அச்சகத்தோடு இணைக்க மத்திய அமைச்சரவை முடிவுசெய்தது.

கோவையில் செயல்பட்டு வந்த அச்சகம் வரும் 15ந்தேதியுடன்  முடப்படும் என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். முதல்வர் எடப்பாடியும் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் இடமாற்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி வணிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவையில் உள்ள பெரியநாயக்கன்பாளையம், பிரஸ்காலனி உள்ளிட்ட இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளது.