சென்னை:

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 15 நாட்கள் முழு கடை அடைப்பு செய்ய தயாராக இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. குறிப்பாக சென்னையில் தொற்று பரவல் உச்சத்தில் உள்ளது. தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட வருகின்றனர்.

இன்று (11-06/2020) மாலை 6 மணி நிலவரப்படி தமிழகத்தில் புதிதாக 1,875 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,407 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 23 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் பலியானோர் 2, அரசு மருத்துவமனையில் பலியானோர் 21. இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 349 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம், இன்று ஒரேநாளில் 1,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 20,705 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் என்றும், தளர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மருத்துவ நிபுணர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையொட்டி, இன்று முதல் சென்னையில் இருந்து  பிற மாவட்டங்களுக்கு செல்ல இ பாஸ் ரத்து செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சென்னையை தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா தொற்று பரவலை தடுக்க தீவிர பணி மேற்கொள்ள  தமிழகஅரசு  முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறத.

இதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முழு லாக்டவுன் செய்யப்படும் என கூறப்படுகிறது. இன்று சென்னை உயர்நீதி மன்றமும் இதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்த நிலையில்,  தமிழக அரசு உத்தரவிட்டால் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் 15 நாட்கள் கடைகளை அடைக்கத் தயார் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, அரசு உத்தரவிட்டால் கடைகள் அடைக்கப்படும் என்றும்,  தமிழக அரசின் நிதித்துறை செயலாளரிடம் நேரில் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.