துர்கா பூஜையில் கலந்துகொண்டு ஆங்கிலத்தில் பேசி அசத்திய ‘மித்ரா’ ரோபோ

நொய்டா:

நொய்டாவில் நடைபெற்ற துர்கா பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மித்ரா என்ற இயந்திர மனிதன், பக்தர்களிடையே ஆங்கிலத்தில் பேசி அசத்தியது. இது பெரும் வரவேற்பை பெற்றது.

நொய்டாவில் பலாக்கா பெங்காலி கல்சுரல் சங்கம் நடத்திய துர்கா பூஜை நிகழ்ச்சிக்கு  இந்திய நிறுவனம் தயாரித்த ‘மித்ரா’ எனும் ரோபோ வரவழைப்பட்டிருந்தது.  சுமார் 5 அடி 5 அங்குலம் உயரத்தில் சாதாரண மனிதர்களை போலவே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, தனது தலையை 28 டிகிரி கோணத்தில் சுழற்றி, ஆங்கிலத்தில் அழகாக பேசி, விழாவுக்கு வந்தவர்களிடையே உரையாடியது. இது ஆச்சரியமாகவும், பிரமிப்பாகவும் இருந்தது.

இந்த ரோபோவுடன் பேச விழாக்குழுவினரும், குழந்தைகளும் மிகுந்த ஆர்வம் காட்டினர். அதனுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

‘மித்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ள  இந்த ரோபோவை பெங்களூருவில்  உள்ள ‘இன்வென்டோ ரோபோடிக்ஸ்’ எனும் நிறுவனம்  உருவாக்கி உள்ளது. கடந்த   2015ம் ஆண்டு இந்த ரோபோ உருவாக்கப்பட்டது. கடந்த வருடம் இந்த ரோபோ காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், அழகாக உரையாடும் வகையும் மேம்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிறுவனத் தயாரிப்பான மற்றொரு ரோபோ,  பெங்களூர் பிவிஆர் திரையரங்கில் செயல்பட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.