தீபாவளி என்பது வட இந்தியாவில் ராமர் வனவாசத்தை முடித்து விட்டு நாட்டுக்கு திரும்பிய நாளாக கொண்டாடப்படுகிறது ஆனால் நம் தமிழ்நாட்டில் கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த போது அவர் கிருஷ்ணரிடம் கோரிய வரத்தின் படி தீபாவளி கொண்டாடப்படுகிறது.

தீபாவளி அன்று எண்ணெய்க் குளியல் முக்கிய பங்காற்றுகிறது.  அன்றைய தினம் அனைத்து நீர் நிலைகளிலும் கங்கையும் நல்லெண்ணையில் லட்சுமி தேவியும் வாசம் செய்வதால் எண்ணெய்க் குளியலை அன்று கங்கா ஸ்னானம் என அழைக்கின்றனர்.  தீபாவளி அன்று அதிகாலையிலேயே எண்ணெய்க் குளியலை முடிக்க வேண்டும்.

அதனால் முதல் நாளே பூஜை இடத்தை சுத்தம் செய்து மாக் கோலமிட வேண்டும். தீபாவளி புதுத்துணிகளை சாமி படத்தின் முன்பு ஒரு தாம்பாளத்தில் வைக்க வேண்டும்.  அத்துடன் தீபாவளிக்காக செய்துள்ள இனிப்பு, காரம் போன்றவற்றையும் சிறிது சிறிது வைக்க வேண்டும்.  வீட்டின் தலைவி முதலில் எழுந்து அக்கால முறைப்படி வெந்நீர் அடுப்பை ஏற்றி விட்டு, அல்லது இக்கால முறைப்படி ஹீட்டரை ஆன் செய்து விட்டு வாசலில் கோலமிட்டு. சாமி விளக்கேற்றிய பின் அனைவரையும் எழுப்ப வேண்டும்.

பிறகு எண்ணெய்க் குளியல் முடிந்ததும் அவரவர் புத்தாடைகளுக்கு சந்தன குங்குமம் தடவிய பின் அதை அணிந்துக் கொண்டு சாமிக்கும் பெரியவர்களுக்கு நமஸ்கரித்து ஆசியை பெற்றுக் கொள்ள வேண்டும்.  உடனே குழந்தைகள் பட்டாசுகள் வெடிக்கத் துவங்குவார்கள்.  காலை ஆறு மணிக்குள் காலை உணவு சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம்.  அதன்படி பெரும்பாலான வீடுகளில் தீபாவளி அன்று இட்லி செய்வது வழக்கம்.  மாமிசம் சாப்பிடுபவர்கள் இட்லிக்கு சைட் டிஷ் ஆக காலையிலேயே ஏதாவது அசைவ உணவை சமைப்பது நல்லது.

மதியம் அவரவர் வீட்டு வழக்கப்படி விருந்து நடைபெறும்.  அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு நமது வீட்டு இனிப்பு-காரம் அளிப்பதும்,  அவர்கள் நமக்கு அளிப்பதும் வழக்கமான ஒன்று.  குழந்தைகள் பட்டாசு மும்முரத்தில் காலை உணவை தவிர்க்கலாம்.   ஆனால் அவர்களை வற்புறுத்தி உணவு அளிக்க வேண்டும்.  அருகில் உள்ள கோயிலுக்கு சென்று இறைவனை வணங்குவது மிகவும் நல்லதாகும்

மேலே குறிப்பிட்டது நமது பாரம்பரிய தீபாவளி வழக்கம்.  தற்போது காலத்திற்கேற்ப பல மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன.  ஆனால் புத்தாடை, எண்ணெய் குளியல், இனிப்பு, காரம் மற்றும் பட்டாசு வெடிப்பது என்றும் மாறாத ஒன்று.

வாசகர்கள் அனைவருக்கும் பத்திரிகை.காம் சார்பில் தீபாவளி வாழ்த்துக்கள்