டில்லி : உயிரை பணயம் வைத்து குற்றவாளியை பிடித்த காவலர்
டில்லி
மேற்கு டில்லியில் உள்ள நரைனா பகுதியில் ஒரு போக்குவரத்து காவலர் தனது உயிரை பணயம் வைத்து ஓடும் கார் மீதேறி குற்றவாளியை பிடித்துள்ளதை ஆம் ஆத்மி எம் எல் ஏ வீடியோ எடுத்துள்ளார்.
மேற்கு டில்லி அதிகம் போக்குவரத்து நிறைந்த பகுதியான நரைனாவில் ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர் ஜர்னைல் சிங் தனது காரில் சென்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் ஒரு கார் சிக்னலில் நிற்காமல் போக்குவரத்து காவலரை நோக்கி செல்வதை கண்டுள்ளார். அந்தக் காவலர் துள்ளி அந்தக் காரின் மீது குதித்து அந்தக் காரை நிறுத்த முயன்றுள்ளார்.
இதைக் கண்ட ஜர்னைல் சிங் உடனடியாக தனது காரை நிறுத்தச் சொல்லி அந்த காவலருக்கு உதவி உள்ளார். இதை சிங் உடன் வந்த உறுப்பினர் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோவை ஜர்னைல் சிங் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.
அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் குற்றவாளியை பிடித்து அபராதம் விதித்துள்ளனர். அபராதம் செலுத்திய பின் அவரை அங்கிருந்து செல்ல அனுமதித்துள்ளனர். இது ஜர்னைல் சிங்குக்கு மிகவும் அதிருப்தியை அளித்துள்ளது.
இது குறித்து சிங்,“உயிரை பணயம் வைத்து அந்தக் காவலர் குற்றவாளியை பிடித்துள்ளார். அவருக்கு சிறு அபராதம் மட்டும் விதித்து அங்கிருந்து செல்ல அனுமதித்ததை கண்டு நான் அதிர்ந்து போனேன். இதன் மூலம் தவறு செய்பவர்கள் அபராதம் செலுத்தினால் போதும் என்னும் மன நிலைமைக்கு வர நேரிடும்” என கூறி உள்ளார்.