போக்குவரத்து நெரிசல்களே வாகனத் துறையில் மந்தநிலை இல்லை என்பதற்கு ஆதாரம்: பாஜக எம்.பி.

புதுடில்லி: மக்களவையில் ஒரு பாஜக எம்.பி., ஆட்டோமொபைல் துறையில் சரிவு இருப்பதாகக் கூறுபவர்கள் “நாட்டை இழிவுபடுத்த” முயற்சிக்கின்றனர். போக்குவரத்து நெரிசல்களே எந்த மந்தநிலையும் இல்லை என்பதற்கு சான்றாகும், என்று பேசினார்.

உத்தரபிரதேசத்தின் பல்லியாவைச் சேர்ந்த பாஜக எம்.பி., வீரேந்திர சிங் மஸ்த் கூறியதாவது : “தேசத்தையும் அரசாங்கத்தையும் அவதூறு செய்வதற்காக, ஆட்டோமொபைல் துறை மந்தமாகிவிட்டதாக ஆட்கள் கூறுகிறார்கள். ஆட்டோமொபைல் விற்பனையில் சரிவு ஏற்பட்டால், சாலைகளில் ஏன் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது? ”

சபையில் விவசாயம் குறித்த விவாதத்தில் பங்கேற்றபோது மஸ்த், இந்த கருத்துக்களைத் தெரிவித்தார். வெங்காயத்தின் விலைகள் அதிகரித்து வருவது தொடர்பாக பேசும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு கிலோவுக்கு ரூ, 25 வீதம் வெங்காயம் நிறைந்த ஒரு லாரியை வழங்கத் தயாராக இருப்பதாக எம்.பி. கூறினார்.

“சிறந்த தரமான வெங்காயம்” பல்லியாவில் உள்ள முஹம்மதாபாத் நகரில் விளைவிக்கப்படுவதாகக் கூறிய மஸ்த், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவருடன் தனது தொகுதிக்கு வர வேண்டும் என்றும், அங்கு வெங்காயத்தை குறைந்த விலையில் வழங்குவதாகவும் கூறினார்.

பொருளாதார மந்தநிலைக்கு எதிராக சர்ச்சைக்குரிய வாதங்களை முன்வைத்த முதல் பாஜக எம்.பி. அல்ல மஸ்த். அக்டோபரில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மூன்று பாலிவுட் திரைப்படங்கள் கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதித்ததது மந்த நிலை இல்லை என்பதற்கு ஆதாரம் என்று கூறியது, குறிப்பிடத்தக்கது.