சென்னை,

டிடிவி தினகரனின் வேட்புமனு ஏற்கப்பட்டதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷிடம் முறையிட்டு உள்ளார்.

ஜெ. மறைவை தொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையில் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதால், அதிமுக என்ற பெயரும், இரட்டை இலை சின்னமும் தேர்தல் கமிஷனால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சசிகலா அணியை சேர்ந்த டிடிவி தினகரன்,  அதிமுக அம்மா கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அவரது வேட்பு மனு ஏற்கக்கூடாது என பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டது. இருந்தாலும், அதையெல்லாம் தள்ளுபடி செய்துவிட்டு, அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் அலுவலர் கூறினார்.

இந்நிலையில் டிராபிக் ராமசாமி, டிடிவி தினகரன் மனுவை தேர்தல் ஆணையர் ஏற்றது தவறு என்றும், தொகுதி வாக்காளர் 10 பேரிடம் டிடிவி தினகரன் கையெழுத்து வாங்காததால், அவரது மனு ஏற்கப்பட்டது தவறு என்று கோரியுள்ளார். அவரை சுயேச்சை வேட்பாளராகவே அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

பரபரப்பான இந்த வழக்கு இன்று பிற்பகல் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.