பொதுநல வழக்குகளின் நாயகர் டிராபிக் ராமசாமி காலமானார்!

சென்ன‍ை: அரசியல்வாதிகளுக்கு எதிரான பொதுநல வழக்குகளால் புகழ்பெற்ற சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

87 வயதாகும் அவர், உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலமானார்.

கடந்த சில மாதங்களாகவே, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார் அவர். ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் மாலை 7.45 மணிக்குக் காலமானார். இந்தத் தகவலை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். அவரது இறுதி சடங்குகள் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக, இவர் சமூக தளத்தில் தீவிரமாக செயலாற்றி வந்தார். அரசியல்வாதிகளின் பல விதிமீறல்களை எதிர்த்து, இவர் பல பொதுநல வழக்குகளை தொடுத்து, ஓயாமல் போராடி வந்தார். இதனால், இவர் சிறைக்கும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.