அமைச்சர் விஜயபாஸ்கர், ராஜன் செல்லப்பா மீது டிராபிக் ராமசாமி வழக்கு

மதுரை:

ரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடாமல் பேரணியில் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சர்க்கார் திரைப்படத்தை எதிர்த்து, மதுரை தியேட்டர் முன் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக ராஜன் செல்லப்பா மீதும் சமூக ஆர்வலர்  டிராபிக் ராமசாமி  வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை டிசம்பர் 3ந்தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் கூறி ஒத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து டிராபிக் ராமசாமி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அவர் தாக்கல் செய்த மனுவில், புதுக்கோட்டை இலுப்பூரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கடந்த நவ. 10-ம் தேதி மருத்துவ முகாமை ஒட்டி நூறு பேருடன் இரு சக்கர வாகனப் பேரணி நடத்தினார். இந்தப் பேரணி யில் அமைச்சரும், மற்றவர்களும் ஹெல்மெட் அணியவில்லை. இதுகுறித்து அமைச்சர் மீதும், மற்றவர்கள் மீதும் இலுப்பூர் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். இது தொடர்பாக உள்துறை செயலர், டிஜிபி, இலுப்பூர் காவல் ஆய்வா ளருக்கு நவ. 13-ல் புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதுபோல, மதுரையில் சர்கார் படம் வெளியான தியேட்டர் முன் கடந்த நவ. 8-ல் அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பாவும், அவரது கட்சியினரும் கூடி சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளனர்.இது தொடர்பாக புகார் அளித்தும் அண்ணாநகர் காவல் ஆய்வாளர் வழக்குபதிவு செய்யவில்லை. எனவே அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை டிசம்பர் 3ந்தேதி நடைபெறும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.