துயரத்தில் முடிந்த சாகசம்!! உயிருடன் புதைக்கப்பட்டவர் பலி

சண்டிகர்:

ஹரியானா மாநிலத்தில் சாகசம் என்ற பெயரில் இளைஞர் ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலம் பானிப்பட் மாவட்டம் சமால்கா தாலுகாவில் உள்ள குரார் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுமித் காதி (17 வயது). இவர் 5ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டார்.

சாலை ஓரங்களில் சாகச நிகழ்ச்சிகள் நடத்தும் ஜகதீப் என்பவருடன் சுமித் காதி சேர்ந்தார். குரார் கிராமத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள சுல்கானா என்ற கிராமத்தில் கடந்த 24ம் தேதி இரவு 10 மணிக்கு ஜகதீப், சுமித் காதி, 7 பேர் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

அங்குள்ள மைதானத்தில் ஒரு குழி தோண்டப்பட்டது. சுமித் காதி சாக்கு பையில் நுழைந்து கொண்டார். அந்த சாக்கு பைக்கு 21 முடிச்சுகள் போடப்பட்டன. அதற்கு முன் சுமித் காதியிடம் ஒரு மொபைல் போன் தரப்பட்டது. பின்னர் அந்த சாக்கு பை குழியில் இறக்கி மேற்புறம் பலகைகளால் மூடப்பட்டது.

அதன் மீது மண் கொட்டி மேலும் இறுக்கமாக மூடினர். மறுநாள் இரவு 10 மணிக்கு குழியில் இருந்து சுமித் காதி உயிருடன் வெளியே வருவார் என கிராம மக்களிடம் தெரிவித்தனர். மேலும் சுமித் காதி புதைக்கப்பட்ட இடத்தில் நீண்ட நேரம் பூஜையும் நடத்தப்பட்டது.

திட்டமிட்டபடி மறுநாள் இரவு 10 மணிக்கு குழியை தோண்டி சுமித் காதியை வெளியே எடுத்த போது மயங்கிய நிலையில் காணப்பட்டார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

குழிக்குள் உயிருடன் புதைக்கப்பட்ட போது வழங்கப்பட்ட மொபைல் போன் மூலம் ஜகதீப் உள்ளிட்ட தன் நண்பர்களை அவர் 26 முறை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். முதல் முறை மட்டும் அனைத்தும் சிறப்பாக செல்கிறது என வெளியே இருந்தவர்கள் கூறியுள்ளனர். அதன் பிறகு அவருடன் போனில் பேசாமல் இருந்துவிட்டனர். தகவலறிந்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து ஜகதீப்பை கைது செய்தனர்.