டில்லி

டிராய் தற்போது அறிவித்துள்ள தொலைக்காட்சி குறைந்த கட்டண உத்தரவை டாடா ஸ்கை செயல்படுத்தாமல் உள்ளது.

தொலைபேசி கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் தற்போது தொலைக்காட்சி சேனல்கல் கட்டணம் குறித்து ஒரு உத்தரவை இட்டுள்ளது. அதன்படி முன்பு போல ஒரு தொகுப்பு என அனைத்து சேனல்களுக்கும் கட்டணம் செலுத்துவதற்கு பதில் பார்க்க விரும்பும் சேனல்களுக்கு மட்டும் கட்டணம் அளித்தால் போதும் என்னும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் எந்தெந்த சேனலுக்கு எவ்வளவு கட்டணம் என்பதை அனைத்து டிஷ் சேவை நிறுவனங்களும் உடனடியாக தெரிவித்து இந்த திட்டத்தை வரும் பிப்ரவரி மாதம் 1 முதல் அமுல் படுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ஒட்டி அனைத்து டிஷ் சேவை நிறுவனங்களும் ஒவ்வொரு சேனலுக்கும் அளிக்க வேண்டிய கட்டனம் குறித்து அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன.

ஆனால் டாடா ஸ்கை நிறுவனம் மட்டும் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளது. மாறாக இந்த நிறுவனத்தின் சேவை மையம் டிராய் தனது கெடுவை மேலும் நீட்டித்துள்ளதாக பொய் தகவல்கள் கூறி வருகிறது. அது மட்டுமின்ற் டாடா ஸ்கை சேவையில், “அரசின் புதிய கட்டணக் உத்தரவு அமுலுக்கு வந்த பிறகு உங்களுக்கு அறிவிக்கிறோம். அதுவரை பழைய கட்டணத்தில் நீங்கள் நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம்” என எழுத்துக்கள் செல்வதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து டிராய், “டாடா ஸ்கை உபயோகிப்பாளர்களிடம் இருந்து எங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. புதிய கட்டணக் கொள்கைப்படி வாடிக்கையாளர்கள் சேனல்களை தேர்ந்தெடுப்பது குறித்து அந்நிறுவனம் எந்த தகவலும் அளிக்கவில்லை என அந்த புகார்களில் கூறப்பட்டுள்ளன.
அது தவிர நாங்கள் கெடுவை நீட்டித்துள்ளதாக தவறான தகவலை இந்நிறுவனம் பரப்பி வருகிறது. டாடா ஸ்கை நிறுவனத்தை உடனடியாக சேனல் கட்டணம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். இது குறித்து அந்நிறுவனம் எடுத்த நடவடிக்கைகல் குறித்து வரும் புதன் கிழமைக்குள் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என அறிவிப்பு வெளியிட்டுள்ளது

டாடா ஸ்கை நிறுவனம் இது குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துள்ளது.