முதல்வரின் பத்திரிகை பேட்டிக்கும் ‘டிரெய்லர்’..

முதல்வரின் பத்திரிகை பேட்டிக்கும் ‘டிரெய்லர்’..

திரைப்படங்கள் வெளியாகும் முன்பாக, விளம்பரத்துக்காக ’டிரெய்லர்’ எனப்படும் முன்னோட்டம் ரிலீஸ் ஆவது வழக்கம்.

பத்திரிகை பேட்டிக்கும் கூட டிரெய்லர் வெளியிடுவார்களா?

மகாராஷ்டிராவில் வெளியிட்டுள்ளார்கள்.

அந்த மாநில முதல் –அமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு வரும் 27 ஆம் தேதி பிறந்த நாள்.

60 வயது.

இதனையொட்டி, அவரது சிவசேனா கட்சியின்  பத்திரிகையான ‘சாம்னா’ வுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரண்டு பாகங்களாக இந்த பேட்டி பிரசுரம் ஆகிறது.

அந்த கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யும், ’சாம்னா’வின் செயல் செய்தி ஆசிரியருமான சஞ்சய் ராத், முதல் –அமைச்சர் தாக்கரேயை பேட்டி கண்டுள்ளார்.

பேட்டியின் ’டீசரை’ தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வடிவில் சஞ்சய் வெளியிட்டுள்ளார்.

இந்த பேட்டியில் அனல் பறக்கும் என்று தெரிகிறது.‘’நான் ஒன்றும் ட்ரம்ப் அல்ல. கொரோனாவால் என் மக்கள் என் கண் முன்னால் அவதிப்படும் போது , அதனை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க நான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அல்ல’’ என்று அந்த பேட்டியில் ’வெள்ளை மாளிகையை’ வம்புக்கு இழுத்துள்ளார், உத்தவ் தாக்கரே.

 -பா.பாரதி.