காஷ்மீரில் 3 நாட்களுக்கு பின் ரெயில் சேவை மீண்டும் இன்று காலையில் தொடங்கியது.

ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் பத்காம் பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில்  ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதனிடையே இப்பகுதியில், பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிராக அப்பகுதி இளைஞர்கள் பலர் வன்முறையில் ஈடுபட்டனர்.  அவர்கள் கற்களை வீசி தாக்குதலிலும் ஈடுபட்டனர்.

இதனால் அந்த இளைஞர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அது பலன் அளிக்காததால் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  இவர்களில் ஐந்து பேர்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தனர்.

இந்த நிலையில், வயிற்றில் குண்டு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் இக்பால் பட் நேற்று மரணமடைந்தார்.   இதனால் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

கடந்த ஞாயிற்று கிழமையில் இருந்து பிரிவினைவாத அமைப்புகளை சேர்ந்த கிலானி, உமர் பரூக் மற்றும் யாசின் மாலிக் ஆகியோர் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.  இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.  ரெயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இன்று வேலை நிறுத்த போராட்டம் எதுவுமில்லை என பிரிவினைவாத அமைப்புகள் தெரிவித்தன.  இதனை தொடர்ந்து   இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

இதையடுத்து கடந்த  3 நாட்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது.