நொறுங்கி விழுந்த விமானம் : உயிர் தப்பிய பயிற்சி விமானி

பெரும்பேடு, தெலுங்கானா

தெலுங்கானாவில் பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகிய போதும் பயிற்சி விமானி உயிர் தப்பி உள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெரும்பேடு என்னும் இடத்தில் பயிற்சி விமான நிலையம் ஒன்று உள்ளது. ராஜிவ் காந்தி விமான பயிற்சி நிலையம் என பெயரிடப்பட்ட இங்கிருந்து பயிற்சி விமான ஓட்டிகள் சிறிய ரக விமானம் மூலம் பயிற்சி மேற்கொள்கின்றனர்.

இந்த விமான நிலையத்தில் இருந்து இன்று காலை ஒரு தனியார் பயிற்சி விமானத்தை பரத் பூஷன் என்பவர் செலுத்தி வந்துள்ளார். பரத் பூஷன் டில்லியை சேர்ந்தவர் ஆவார். திடீரென விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது.

தொழில் நுட்ப கோளாறு காரணமாக விபத்தில் சிக்கிய இந்த விமானம் வயல் வெளியில் விழுந்தது.. விபத்து நடந்த போது வயலில் யாரும் இல்லை. அதனால் யாருக்கும் எவ்வித அபாயமும் ஏற்படவில்லை.

அதை விட 35 வயதான பயிற்சி விமானி பரத் பூஷன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கதாகும்.