சென்னை: தமிழகம் முழுவதும் 46 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போட 21 ஆயிரம் நர்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டுடனான விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந் நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இந்த நடவடிக்கைகளை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இங்கிலாந்தில் இருந்து வந்த 2,724 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

முதல் கட்டமாக 926 பேரை தொடர்பு கொண்டோம். அவர்களில் 511 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 25ம் தேதியில் இருந்து கடந்த 23ம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து வந்த 38 ஆயிரம் பேரின் விவரங்களையும் சேகரித்துள்ளோம். அவர்கள் அனைவரும் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் நிரந்தர கொரோனா பரிசோதனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கிலாந்தை போல தென் ஆப்ரிக்காவில் இருந்து வருபவர்களையும் கண்காணித்து வருகிறோம்.

தமிழகத்தில் முதல்கட்டமாக 5 லட்சம் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். அவர்களின் விவரங்களை சேகரித்து உள்ளோம். கொரோனா தடுப்பூசி போட 21 ஆயிரம் நர்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 46 ஆயிரம் மையங்கள் தயார் நிலையில் உள்ளன என்று கூறினார்.