பெங்களூரு: கொரோனா காரணமாக ரஷ்யாவில் நிறுத்தி வைக்கப்பட்ட ககன்யான் திட்டப் பயிற்சிகள் மீண்டும் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இத்திட்டத்திற்கு, இந்தியா சார்பில் 4 பேர் தேர்வுசெய்யப்பட்டு, அவர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி தொடங்கியது.
ககன்யான் திட்டம், எதிர்வரும் 2022ம் ஆண்டு செயல்படுத்தப்படவுள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்திற்கு, இந்திய விண்வெளி வீரர்களிலிருந்து 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நால்வருக்கும், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இந்திய விண்வெளி வீரர்கள், தங்கள் பயிற்சிகளை மீண்டும் துவக்கியுள்ளதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ‘ரோஸ்கோஸ்மோஸ்’ தெரிவித்துள்ளது. அந்த மையம் சார்பில் மேலும் கூறியிருப்பதாவது; ஜிசிடிசி எனப்படும் காகரின் ஆராய்ச்சி மற்றும் விண்வெளி வீரர்கள் பயிற்சி மையத்தில், இந்திய விண்வெளி வீரர்கள் தங்கள் பயிற்சிகளை கடந்த 12ம் தேதி முதல் மீண்டும் துவங்கியுள்ளனர்.
நான்கு இந்திய வீரர்களும் நல்ல உடல்நலத்துடன் உள்ளனர். வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பயிற்சி மையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து ஊழியர்கள் மற்றும் பயிற்சி பெறும் வீரர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.