உபரி நிதியை அரசுக்கு அளித்தால் ரிசர்வ் வங்கியின் தர மதிப்பீடு சரியும் : ரகுராம் ராஜன்

டில்லி

ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரித்தொகையை மத்திய அரசுக்கு அளித்தால் வங்கியின் தர மதிப்பீடு சரியும் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஏற்கனவே எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதியை அளிக்க மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்திருந்தது. முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அரசுடன் அவருக்கு கடும் மோதல் ஏற்பட்டது. அவர்  ராஜினாமாவுக்குப் பிறகு அமைக்கப்பட்ட முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜவான் குழு உபரித் தொகையை அளிக்கலாம் எனப் பரிந்துரைத்ததை அடுத்து ரிசர்வ் வங்கி அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வழங்க உள்ளது.

இது குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும் பிரபல பொருளாதார பேராசிரியருமான ரகுராம் ராஜன் கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்த கருத்துக்கள் குறிப்பிடத்தக்கதாகும். ஒரு தொலைக்காட்சி பேட்டியில் ரகுராம் ராஜன், “மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதியை மாற்றும் நடவடிக்கை எடுத்தால் ரிசர்வ் வங்கியின் தர மதிப்பீடு சரியும். இப்போது தர மதிப்பீடு அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் கடன் வழங்கும்  மதிப்பானது ஏஏஏ என்ற அளவில் உள்ளது. இது சரியும்போது ஒட்டுமொத்த பொருளாதாரமே பாதிப்புக்குள்ளாகும்.

மத்திய அரசுக்கு உபரி நிதியை மாற்றுவதால் சரியும் மதிப்பீடு எந்த அளவுக்கு இருக்கும் என்பது ஒதுக்கீடு செய்யும் தொகையைப் பொறுத்தது. அதே வேளையில் சரிவானது உடனே தெரியாது எனினும் நிச்சயம் அதன் தாக்கம் ஒரு கட்டத்தில் வெளிப்படும். இந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு ரிசர்வ் வங்கியும், அரசும் பரஸ்பரம் விரிவாக விவாதிக்க வேண்டும்.

இப்போது பிஏஏ என்ற நிலையில் உள்ளோம். இது முதலீட்டுக்கான மதிப்பீடு ஆகும். சில சமயம் வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அப்போது நமது தர மதிப்பீடு அதிகமாக இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியிடம் அதிக லாபம்  இருப்பதற்கு முக்கிய காரணம் இந்திய ரூபாய் மாற்று மதிப்பு மாறுபடும்போது கிடைத்த பலன். இதில் ஒரு பகுதி அவசரகால நிதிக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.” எனக் குறிப்பிட்டிருந்தார்.