புகார் அளித்தவரை பழிவாங்கும் சிபிஐ இடைக்கால தலைவர் : சிபிஐ அதிகாரி கடிதம்

டில்லி

தாம் சிபிஐ இடைக்காலத் தலைவரின் தவறான நடத்தை குறித்து புகார் அளித்ததால் இடமாற்ற தண்டனை பெற்றுள்ளதாக சிபிஐ சுப்பிரண்ட் ராஜா பாலாஜி கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார் .

சிபிஐ டில்லி அலுவலகத்தில் லஞ்ச தடுப்பு பிரிவில் ராஜா பாலாஜி பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம்  காசியாபாத் நகரில் உள்ள சிபிஐ அகாடமிக்கு திடீர் என இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு ராஜா பாலாஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமது இடமாற்றத்தை எதிர்த்து டில்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் அவர் சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவுக்கு தாம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு அடுத்த நாளான ஜனவரி 22 ஆம் தேதி எழுதிய கடிதத்தை இணைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் ராஜா பாலாஜி, “எனது மாமியார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் நான் மனிதாபிமான அடிப்படையில் டில்லிக்கு இடமாற்றம் கோரினேன். எனது கோரிக்கைய ஏற்றுக் கொண்ட அரசு எனக்கு அவர் சிகிச்சை பெற்று வந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மிக அருகில் இருந்த கிழக்கு கித்வாய் நகரில் உள்ள அரசுக் குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது அதை கருத்தில் கொள்ளாமல் என்னை நீங்கள் இடமாற்றம் செய்துள்ளீர்கள்.

வயதான ஒரு நோயாளிப் பெண்மணியையும் கருத்தில் கொள்ளாமல் நீங்கள் என்னை இடமாற்றம் செய்ததற்கான காரணம் என்னை விட உங்களுக்கு நன்கு நினைவிருக்கும். தங்களுடைய தவறான நடத்தை குறித்து நான் கடந்த 2017ஆம் வருடம் மார்ச் மாதம் 11 ஆம் தேதி அன்று அப்போதைய சிபிஐ இயக்குனருக்கு ஒரு புகார் கடிதம் எழுதி உள்ளேன். அது குறித்து நீங்கள் எனக்கு 2017 ஆம் வருடம் மே மாதம் 2 ஆம் தேதி எனக்கு மெமோ அளித்தீர்கள்.

அந்த மெமோவுக்கு நான் அளித்த பதிலால் பல நாட்கள் உங்கள் உறக்கம் கெட்டது.. அனேகமாக அதற்கு பழி தீர்க்க என்னை நீங்கள் தற்போது இடமாற்றம் செய்துள்ளீர்கள் என எண்ணூகிறேன். அதுவும் அரசின் செலவிலும் பொதுமக்களுக்கு எதிராகவும் பழி வாங்கி உள்ளீர்கள். ஒரு இடைக்கால இயக்குனர் தனது இயக்குனர் பதவியை வைத்து அமைப்பு சாராமலும் பொதுமக்களுக்கு இடையூறாகவும் உத்தரவிடுவது தவறான நடைமுறை ஆகும்” என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சிபிஐ தலைமை அலுவலகம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுளது. அந்த அறிக்கையில் ”ராஜா பாலாஜி அனுப்பியதாக கூறப்படும் கடிதம் இதுவரை சிபிஐ இயக்குனர் அலுவலகத்துக்கு வரவில்லை. அந்த கடிதம் கிடைத்த உடன் அதன் மீதான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ராஜா பாலாஜி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள காசியாபாத் நகர் டில்லியின் ஒரு பகுதியாகும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இடைக்கால இயக்குனராக பொறுப்பேற்றதும் நாகேஸ்வர ராவ் பல அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார்.   அவர்களில் ராஜா பாலாஜியும் ஒருவர் ஆவார்.