தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் முழுவதும் திருநங்கைகளால் நடத்தப்படும் பால் பண்ணையைப் பற்றிய ஒரு செய்தி

திருநங்கைகள் என்றாலே சற்றே அருவெறுப்பு மற்றும் முகச் சுளித்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலை வெகு நாட்களாக இருந்து வந்தது.   தற்போது சில காலங்களாக அந்நிலை மாறி வருகிறது.  மூன்றாம் பாலினத்தவர் எனக் கூறப்படும் திருநங்கைகளுக்குப் பல நல்வாழ்வு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன.  அவர்களுக்கு வேலைவாய்ப்பு, சுய தொழில் உதவி எனப் பல இனங்களிலும் உதவிகள் அளிக்கப்படுகின்றன.

அவ்வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கைகள் இணைந்து நடத்தும் பால்பண்ணை உள்ளது.  இந்த பால்பண்ணை தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி நகரில் இருந்து மூன்று கிமீ தொலைவில் உள்ள மந்தி தோப்பு என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது..  இந்த பால்பண்ணை முழுக்க முழுக்க திருநங்கைகளால் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் முதல் முறையாக மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்காக ஒரு குடியிருப்பைத் திறந்து வைத்தது.  இந்த 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள குடியிருப்பு பகுதியில் 85 திருநங்கைகள் இணைந்து இந்த பால் பண்ணையை நடத்தி வருகின்றனர்   இந்த திட்டத்தை திருநங்கை ஆர்வலர் கிரேஸ் பானு சென்ற வருடம் ஜூலை மாதம் தொடங்கினார்.

இதற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பெருமளவில் உதவி உள்ளார்.  இவர்களுக்கு வருவாய்த்துறை, கால்நடைத்துறை, கூட்டுறவு, கிராம முன்னேற்றத் துறை உள்ளிட்ட 7 துறைகளில் இருந்து உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.   இது தங்களின் கனவுத் திட்டம் எனவும் தங்கள் 7 வருட கனவு தற்போது நிறைவேறி உள்ளதாகவும் கிரேஸ் பானு தெரிவித்துள்ளார்.   மேலும் முந்தைய ஆட்சியர் தங்களுக்கு உதவாத நிலையில் தற்போதைய ஆட்சியர் ஒத்துழைப்பு அளிப்பதால் இந்த இடத்துக்கு சந்தீப் நகர் எனப் பெயர் இட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல மாவட்டங்களில் திருநங்கைகள் வாழ வீட்டு வசதி திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்த போதிலும் இதில் திருநங்கைகள் வாழ்வாதாரத்துக்கும் வழி வகை செய்ய வசதி இருக்க வேண்டும் என கிரேஸ் பானு விரும்பினார்,  இதையொட்டி இதே பகுதியில் பால் பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது.   இது நாட்டில் முதல் முறை எனவும் இதைச் சரியான முறையில் படிவு செய்ய ஆட்சியர் உதவியதாகவும் கிரேஸ் பானு தெரிவித்துள்ளார்.

மந்திதோப்பு திருநங்கைகள் பால் உற்பத்தி சொசட்டிஎன்னும் இந்த சங்கம் தினமும் ஆவின் நிறுவனத்துக்கு 250 முதல் 280 லிட்டர்கள் அளித்து வருகிறது.